செய்திகள்
அமமுக

தோல்விக்கு இதுவும் ஒரு காரணம்- 21 தொகுதிகளில் அதிமுக கூட்டணி ஓட்டுகளை பிரித்த அமமுக

Published On 2021-05-05 02:50 GMT   |   Update On 2021-05-05 02:50 GMT
அ.தி.மு.க.வை விட்டு பிரிந்து சென்று புதிதாக உதயமான அ.ம.மு.க., 21 தொகுதிகளில் அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வெற்றி வாய்ப்பை பறித்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
சென்னை:

நடைபெற்று முடிந்த 16-வது சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. அ.தி.மு.க. கூட்டணி 75 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. இதில், அ.தி.மு.க. மட்டும் வெற்றி பெற்ற இடங்கள் 65 ஆகும்.

அதிலும், அ.தி.மு.க.வை விட்டு பிரிந்து சென்று புதிதாக உதயமான அ.ம.மு.க., 21 தொகுதிகளில் அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வெற்றி வாய்ப்பை பறித்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது. காரைக்குடி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.மாங்குடி பா.ஜ.க. வேட்பாளர் எச்.ராஜாவை 21,589 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். ஆனால், அந்தத் தொகுதியில் அ.ம.மு.க. 44,864 வாக்குகளை பெற்றுள்ளது. இந்த வாக்குகள் அ.தி.மு.க. கூட்டணி கட்சியான பா.ஜ.க.வுக்கு கிடைத்திருந்தால், எச்.ராஜா வெற்றி பெற்றிருப்பார்.



இதேபோல், திருவாடானை, ஆண்டிப்பட்டி, பாபநாசம், தியாகராயநகர், சாத்தூர், தென்காசி, உத்திரமேரூர், ராஜபாளையம், காட்பாடி, நெய்வேலி, விருத்தாசலம், நாங்குநேரி, மயிலாடுதுறை, திருமயம், கந்தர்வக்கோட்டை, மன்னார்குடி, வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், திருப்போரூர், தாராபுரம் ஆகிய 20 தொகுதிகளிலும் கணிசமான வாக்குகளை அ.ம.மு.க. பெற்றுள்ளது.

இந்தத் தொகுதிகளில் அ.ம.மு.க. பெற்ற வாக்குகளைவிட தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கான வாக்கு வித்தியாசம் குறைவு ஆகும். அதாவது, இந்தத் தொகுதிகளில் அ.ம.மு.க. வாங்கிய ஓட்டுகள் அ.தி.மு.க.வுக்கு கிடைத்திருந்தால், மேலும் 21 தொகுதிகளை கைப்பற்றியிருக்க முடியும். ஆட்சியை பிடிக்க இது உதவாது என்றாலும் வலுவான எதிர்க்கட்சியாக சட்டசபையில் அ.தி.மு.க. அமர்ந்திருக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும்.
Tags:    

Similar News