செய்திகள்
கன மழையினால் வீடுகளை சூழ்ந்த மழை நீர்

சேலத்தில் 100 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது- பொதுமக்கள் தவிப்பு

Published On 2021-09-24 09:39 GMT   |   Update On 2021-09-24 09:39 GMT
சேலம் புதிய பஸ் நிலையத்தில் அதிக அளவில் தண்ணீர் தேங்கியதால் பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.
சேலம்:

சேலம் மாவட்டத்தில் 2-வது நாளாக நேற்றிரவு கனமழை பெய்தது. குறிப்பாக பெத்தநாயக்கன்பாளையம், சங்ககிரி, ஆத்தூர், ஏற்காடு, ஆகிய பகுதிகளில் கனமழை கொட்டியது.

இரவு 9 மணிக்கு தொடங்கிய மழை 2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதே போல சேலம் மாநகரில் அண்ணா பூங்கா, சத்திரம், செவ்வாய்ப்பேட்டை, பள்ளப்பட்டி, அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, கொண்டலாம்பட்டி, ஜங்சன் உள்பட அனைத்து பகுதிகளிலும் கன மழை பெய்தது. 2-வது நாளாக பெய்த மழையால் அழகாபுரம் சோனாநகர், மாரிமுத்து கவுண்டர் தெரு, அம்மாப்பேட்டை பச்சப்பட்டி, சிங்க மெத்தை பகுதி, பெரமனூர், கிச்சிப்பாளையம் நாராயண நகர் உள்பட பல பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது.

இதனால் அந்த பகுதி மக்கள் தூங்க முடியாமல் தவித்தனர். இதையடுத்து இன்று காலை முதல் மாநகராட்சி அதிகாரிகள் அந்த பகுதிகளில் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதே போல சேலம் புதிய பஸ் நிலையத்தில் அதிக அளவில் தண்ணீர் தேங்கியதால் பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.

மாவட்டத்தில் அதிக பட்சமாக பெத்த நாயக்கன் பாளையத்தில் 105 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சங்ககிரி 87, ஆத்தூர் 61, ஏற்காடு 41, மேட்டூர் 28.8, சேலம் 15.7, கரியகோவில் 10, எடப்பாடி 9.4, கெங்க வல்லி 5, ஆனை மடுவு 2 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 364 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.


Tags:    

Similar News