செய்திகள்
கோப்புபடம்

முத்துப்பேட்டையில் மகனின் மோட்டார் சைக்கிளை போலீசார் தர மறுப்பு - போலீஸ் நிலைய வளாகத்தில் தந்தை அதிர்ச்சியில் பலி

Published On 2021-06-07 10:26 GMT   |   Update On 2021-06-07 10:26 GMT
முத்துப்பேட்டை அருகே மகனின் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த போலீசார் தர மறுத்ததால் போலீஸ் நிலைய வளாகத்தில் தந்தை பலியானார்.

முத்துப்பேட்டை:

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே உள்ள செம்படவன்காடு ஊமைககொல்லை பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ்(55). சலூன் கடை நடத்தி வந்த அவர் கொரோனா ஊரடங்கால் வருவாயிழந்து வீட்டிலிருந்தார். இவரது மனைவி வேதவள்ளி அப்பகுதி அங்கன்வாடி உதவியாளர். இவர்களது மகள் கோமதி (20). கல்லூரி மாணவி. மகன் விமல்நாதன் (19). கரூர் பகுதியில் உள்ள கல்லூரியில் தொழிற்கல்வி படித்து வருகிறார்.

கொரோனா ஊரடங்கினால் கரூர் செல்லமுடியாத விமல்நாதன் நேற்று தாயார் வேலை பார்க்கும் அங்கன்வாடிக்கு உணவு பொருட்கள் மற்றும் சத்துமாவு பாக்கெட் மூட்டையை மோட்டார் சைக்கிளில் எடுத்துச்சென்று கொடுத்துவிட்டு விட்டு வந்து கொண்டிருந்தார்.

அப்போது செம்படவன் காடு ரயில்வே கேட்டு அருகே ரோந்து வந்த போலீசார் ஊரடங்கு உத்தரவை மீறியதாக விமலநாதன் பைக்கை பறிமுதல் செய்து முத்துப்பேட்டை காவல் நிலையம் கொண்டு சென்றனர். இதுகுறித்து மகனின் தொலைபேசி மூலம் தகவல் அறிந்து வந்த வேதவள்ளி, அவரது கணவர் தர்மராஜன் ஆகியோர் போலீசாரிடம் விபரத்தை கூறி மோட்டார் சைக்கிளை திரும்ப தரும்படி கேட்டுள்ளனர். அதற்கு போலீசார் மறுத்ததாக கூறுப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த தர்மராஜ் காவல்நிலையம் வளாகத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். இதனைக்கண்ட அவரது மனைவி, மகன் மற்றும் சிலர் தர்மராஜை மீட்டு எதிரே உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த சில நிமிடங்களிலேயே இறந்து விட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து அவரது உறவினர்கள், கிராமமக்கள் காவல் நிலையத்தில் திரண்டனர். இதனால் பதற்றமான சூழ்நிலை உருவாகியது. தகவல் அறிந்து அங்கு திருத்துறைப்பூண்டி டி.எஸ்.பி. பழனிச்சாமி, இன்ஸ்பெக்டர் செந்தூர் பாண்டியன் மற்றும் எடையூர், பெருகவாழ்ந்தான் இன்ஸ்பெக்டர் உட்பட ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் இதுகுறித்து தர்மராஜின் மனைவி வேதவள்ளி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மயங்கி விழுந்து பலியான தர்மராஜின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி பொறுப்பாளர் மகாலிங்கம் கூறுகையில்: போலீசார் சாலையில் சுற்றி திரிபவர்களை பிடிக்காமல், தெருக்களில் பைக்குகளை பறிமுதல் செய்து வருகின்றனர். போலீசார் முறையற்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags:    

Similar News