செய்திகள்
மேட்டூர் அணை

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 34 ஆயிரம் கனஅடியாக நீடிப்பு

Published On 2021-07-27 04:09 GMT   |   Update On 2021-07-27 04:09 GMT
மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
மேட்டூர்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் மற்றும் கேரள மாநிலம் வயநாடு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கபினி அணை நிரம்பி உள்ளது. கிருஷ்ணராஜசாகர் அணை முழு கொள்ளளவை நெருங்கி வருகிறது.

இந்த 2 அணைகளில் இருந்தும் விநாடிக்கு 36 ஆயிரத்து 733 கன அடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் தமிழக- கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவை கடந்து ஒகேனக்கல்லுக்கு வருகிறது. இதனால் ஒகேனக்கல்லில் 34 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஒகேனக்கல் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஒகேனக்கல்லில் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதால் சுற்றுலா பயணிகள் அங்கு செல்வதை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இரு கரைகளையும் தொட்டபடி காவிரியில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது.

மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 34 ஆயிரத்து 144 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 34 ஆயிரத்து 141 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரியில் டெல்டா பாசனத்திற்காக 12 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் நேற்றிரவு முதல் தண்ணீர் திறப்பு 10 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை பெய்வதால் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

நேற்று 75.34 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 77.43 அடியானது. ஒரே நாளில் 2 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இனி வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்பு உள்ளது.
Tags:    

Similar News