ஆன்மிகம்
பால்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலம்

கோட்டை மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா: பால்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலம்

Published On 2021-02-21 07:52 GMT   |   Update On 2021-02-21 07:52 GMT
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் மாசித்திருவிழாவை முன்னிட்டு பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி திண்டுக்கல் திருமங்கலத்தை சேர்ந்த நாடார் இளைஞர் சங்கம், மாதர் சங்கம் சார்பில் நேற்று காலை பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இந்த பால்குட ஊர்வலம் திண்டுக்கல் பெரியகடைவீதியில் உள்ள நாடார் பேட்டை கருப்பணசாமி கோவிலில் இருந்து புறப்பட்டது. இதில் ஏராளமானோர் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். இந்த ஊர்வலம் 4 ரதவீதிகள் வழியாக கோட்டை மாரியம்மன் கோவிலை சென்றடைந்தது. இதையடுத்து அங்கு அம்மனுக்கு பால் அபிஷேகம் நடந்தது.

இதைத் தொடர்ந்து கோட்டை மாரியம்மன் கோவில் முன்மண்டபத்தில் மாலை 6 மணிக்கு மாதர் சங்கத்தினரால் மாக்கோலம், பூக்கோலமிடப்பட்டது. மேலும் பட்டீஸ்வரம் ஸ்ரீதுர்க்கை அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அதன்பின்னர் கோட்டை மாரியம்மனுக்கு சந்தனகாப்பு, பூஜை, நைவேத்தியம் நடத்தப்பட்டது. மேலும் கோவில் கலையரங்கில் நண்பர்கள் இசைக்குழுவினரின் இன்னிசை கச்சேரி நடைபெற்றது.

இதில் உறவின்முறை தலைவர் ரமே‌‌ஷ்பாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை திண்டுக்கல் திருமங்கலத்தை சேர்ந்த நாடார் இளைஞர் சங்க தலைவர் சோமசுந்தரம், செயலாளர் சரவணன், பொருளாளர் ஸ்ரீதரன், துணை தலைவர் பூமண்டலம், உதவி செயலாளர் ரவீந்திரன் மற்றும் மாதர் சங்கத்தினர் செய்து இருந்தனர்.
Tags:    

Similar News