செய்திகள்
குஜராத் முதல்வர் விஜய் ரூபானி

பா.ஜனதா முதல்வருக்கு ரூ.191 கோடியில் விமானம்

Published On 2019-11-07 10:33 GMT   |   Update On 2019-11-07 10:33 GMT
தொடர்ந்து 7 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை பறக்கும் திறன் உடைய பாம்பர் டைர் சேலஞ்சர் 650 ரக விமானம், குஜராத் முதல்வரிடம் 2 வாரங்களில் ஒப்படைக்கப்பட உள்ளது.
ஆமதாபாத்:

குஜராத் மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. முதல்- மந்திரியாக விஜய் ரூபானி உள்ளார்.

குஜராத் முதல்வரின் நீண்ட தூர பயணத்துக்காக விமானங்களை வாடகைக்கு எடுத்து வந்தனர். இதற்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.1 லட்சத்துக்கு மேல் கட்டணம் கொடுக்கப்பட்டு வந்தது.

தற்போது குஜராத்தில் முதல்வர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பயணிக்க பீச் கிராப்ட் சூப்பர் கிங் விமானம் பயன்படுத்தப்படுகிறது. 20 ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ள இந்த விமானத்தில் 9 பேர் வரை பயணிக்க முடியும்.

ஒரு மணி நேரத்தில் 870 கி.மீட்டர் தூரம் பயணிக்கலாம். இந்த விமானம் அதிக காலம் பயன்படுத்தியதாலும், நீண்ட தூரம் பயணிக்க முடியாது என்பதாலும் புதிய விமானம் வாங்க குஜராத் மாநில அரசு முடிவு செய்தது.

இதையடுத்து புதிய விமானத்துக்காக சர்வதேச அளவில் ஒப்பந்தப்பள்ளி கோரப்பட்டது. இதில் ரூ.191 கோடியில் ‘பாம்பர் டைர் சேலஞ்சர் 650’ ரக விமானம் வாங்கப்பட்டுள்ளது.

விமானம் வாங்குவதற்கான நடைமுறைகள் சுமார் 5 ஆண்டுகள் நடந்து வந்தது. தற்போது நடைமுறைகள் முடிந்து புதிய விமானம் வாங்கப்பட்டு உள்ளது.

இரண்டு என்ஜின் கொண்ட இந்த சிறிய ரக சொகுசு விமானத்தில் 12 பேர் வரை பயணிக்க முடியும். தொடர்ந்து 7 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை பறக்கும் திறன் உடையது. புதிய விமானம் 2 வாரங்களில் குஜராத் அரசிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட உள்ளது.
Tags:    

Similar News