செய்திகள்
விளையாட்டு போட்டிகளில் சாதனை படைத்த வீரர், வீராங்கனைகளுக்கு கலெக்டர் ஊக்கத்தொகை வழங்கியபோது எடுத்தபடம்.

வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.10½ லட்சம் ஊக்கத்தொகை- கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வழங்கினார்

Published On 2020-11-12 09:47 GMT   |   Update On 2020-11-12 09:47 GMT
விளையாட்டு போட்டிகளில் சாதனை படைத்த வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.10½ லட்சம் ஊக்கத்தொகையை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வழங்கினார்.
ஊட்டி:

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த அக்டோபர் மாதம் 28-ந் தேதி விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். கடந்த 2018-19-ம் ஆண்டிற்கான 64-வது தேசிய பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் விளையாட்டு போட்டிகள் குஜராத், மணிப்பூர் போன்ற இடங்களில் நடைபெற்றது. இந்த போட்டிகளில் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு விளையாடி 3 தங்கம், 3 வெள்ளி பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர். தேசிய பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டிகளில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி, ஊட்டி பிங்கர்போஸ்ட்டில் உள்ள நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் வளாக அரங்கில் நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி வீரர், வீராங்கனைகள் 6 பேருக்கு ரூ.10.50 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கி பாராட்டினார். 19 வயதுக்கு உட்பட்ட தொடர் ஓட்டத்தில் வெற்றி பெற்று தங்க பதக்கம் வென்ற குன்னூர் புனித சூசையப்பர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் விவின் ரிச்சர்டுக்கு ரூ.2 லட்சம், 17 வயதுக்கு உட்பட்ட(32-35 கிலோ எடை பிரிவு) டேக்வாண்டோ போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற கோத்தகிரி விஷ்வ சாந்தி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி நிமிஷா ரூ.1.50 லட்சம், 49-52 கிலோ எடை பிரிவில் நடந்த டேக்வாண்டோ போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற கோத்தகிரி விஷ்வ சாந்தி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி அருளரசிக்கு ரூ.1.50 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.

மேலும் 14 வயதுக்கு உட்பட்ட(18-21 கிலோ எடை பிரிவு) டேக்வாண்டோ போட்டியில் தங்க பதக்கம் வென்ற அதே பள்ளியை சேர்ந்த மாணவர் பிரித்திவிராஜிக்கு ரூ.2 லட்சம், 22-24 கிலோ எடை பிரிவில் நடந்த டேக்வாண்டோ போட்டியில் தங்க பதக்கம் வென்ற மேற்கண்ட பள்ளி மாணவி சந்தியாவுக்கு ரூ.2 லட்சம், 35-38 கிலோ எடை பிரிவில் நடந்த டேக்வாண்டோ போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற மாணவி பவதாரணிக்கு ரூ.1.50 லட்சத்துக்கான காசோலை என 6 பேருக்கு உயரிய ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. அவர்கள் மேலும் விளையாட்டு போட்டிகளில் பங்கு பெற்று வெற்றியை தேடித்தர பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ஜெயசந்திரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நசுருதீன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சாய்ராம் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News