செய்திகள்
லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

தஞ்சையில் பத்திர பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

Published On 2019-09-17 05:02 GMT   |   Update On 2019-09-17 05:02 GMT
லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனையில் பத்திர பதிவு அலுவலகத்தில் ரூ.1 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகம் தஞ்சை புதிய கலெக்டர் அலுவலகத்தின் பின்பகுதியில் செயல்பட்டு வருகிறது.

இங்கு பத்திர பதிவு செய்ய வருபவர்களிடம் லஞ்சம் வாங்கப்படுவதாக தஞ்சை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் சென்றது.

இந்த நிலையில் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு மனோகரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் என 6 பேர் நேற்று மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வந்து திடீர் சோதனை நடத்தினர். மாலை தொடங்கிய இந்த சோதனை இரவிலும் நீடித்தது.

இந்த சோதனையின்போது கணக்கில் வராத பணம் ரூ.1 லட்சம் சிக்கியது.

இது தொடர்பாக அலுவலகத்தில் இருந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் போலீசார் சோதனை நடத்தியபோது மின்தடை ஏற்பட்டது.

இதையடுத்து போலீசார் டார்ச் லைட் மற்றும் செல்போன் வெளிச்சம் மூலம் சோதனை நடத்தினர்.

அலுவலகத்துக்கு பத்திரப்பதிவு செய்வதற்காகவும், புதிதாக திருமணம் ஆன ஜோடிகள் 4 பேர் தங்கள் திருமணத்தை பதிவு செய்வதற்காகவும் வந்திருந்தனர். லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தியதால் வெகுநேரம் காத்திருந்தனர்.

தொடர்ந்து சோதனை நடந்து கொண்டே இருந்ததால் அவர்கள் பின்னர் வேறு ஒரு நாள் வருமாறு கூறியதை தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

Tags:    

Similar News