செய்திகள்
ரியாஸ்அகமது- தஸ்னீம்

சொந்த வீட்டில் ரூ.44 லட்சம் திருடியதாக தொழில் அதிபர் மனைவி கைது

Published On 2020-12-03 04:16 GMT   |   Update On 2020-12-03 04:16 GMT
சென்னை மந்தைவெளியில் தனது வீட்டிலேயே ரூ.44 லட்சத்தை திருடியதாக தொழில் அதிபரின் மனைவி, அவரது முகநூல் நண்பருடன் கைது செய்யப்பட்டார்.
சென்னை:

சென்னை மந்தைவெளி பெரிய பள்ளி தெருவில் வசிப்பவர் தமீம் அன்சாரி (வயது 40). தொழில் அதிபரான இவர் சென்னை வண்ணாரப்பேட்டையில் துணிக்கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டில் பீரோவில் வைத்திருந்த ரூ.44 லட்சம் திருட்டுபோய் விட்டதாக கடந்த மாதம், பட்டினப்பாக்கம் போலீசில் புகார் கொடுத்தார்.

பட்டினப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். வீட்டில் பீரோ எதுவும் உடைக்கப்படவில்லை. கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். கேமரா வேலை செய்யவில்லை. எனவே தொழில் அதிபரின் வீட்டில்தான் யாராவது பணத்தை திருடி இருக்க வேண்டும் என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இந்த வழக்கில் துப்பு துலக்கி குற்றவாளியை கைது செய்ய மயிலாப்பூர் துணை கமிஷனர் சேஷாங்ஷாய் நேரடியாக களத்தில் இறங்கினார். இன்ஸ்பெக்டர் நவாஸ் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரித்தார்.

பணம் திருட்டுபோன சம்பவத்திற்கு முந்தைய நாள் தொழில் அதிபர் தமீம்அன்சாரி தனது மகனுக்கு பிறந்த நாள் கொண்டாடினார். பிறந்த நாள் விழாவுக்கு வந்த தனது உறவினர்கள் யாராவது பணத்தை திருடி இருக்கலாம் என்று தமீம் அன்சாரி கருதினார். அது பற்றி போலீசுக்கும் தகவல் சொன்னார். இதற்கிடையில் தமீம் அன்சாரியின் மனைவி தஸ்னீம் (36), பணம் திருட்டு போன அன்று ஒரு சூட்கேசை எடுத்துக்கொண்டு தனியாக வெளியில் சென்றதாகவும், அதை வெளியில் சொல்ல வேண்டாம் என்று தனது மகனிடம் கூறியதாகவும் ஒரு தகவல் வெளியானது.

அது பற்றி போலீசார் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. தஸ்னீம்தான் பணத்தை திருடி, அதை ஒரு சூட்கேசில் எடுத்து சென்று தனது முகநூல் நண்பர் ரியாஸ்அகமது (38) என்பவரிடம் கொடுத்தது தெரிய வந்தது. தஸ்னீம் கடந்த 3 ஆண்டுகளாக முகநூல் மூலம் ரியாஸ் அகமதுவிடம் பழகி வந்துள்ளார். அந்த பழக்கத்தில் தனது வீட்டில் இருந்தே ரூ.44 லட்சம் பணத்தை திருடி, தனது முகநூல் நண்பர் ரியாஸ் அகமதுவிடம் கொடுத்துள்ளது வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட்டது.

பின்னர் விஷயம் வெளியில் தெரியாமல் இருக்க தஸ்னீம் நாடகமாடியது அம்பலமானது. போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியபோது, தஸ்னீம் போலீசார் மீதே புகார் கணை தொடுத்தார். முகநூல் நண்பரிடம், தஸ்னீம் தினமும் நீண்ட நேரம் செல்போனில் பேசியதையும், ஒரு ஆதாரமாக சொல்லி, அவரை போலீசார் மடக்கினார்கள்.

சென்னை ராயப்பேட்டையில் வைத்து தஸ்னீம், ரியாசிடம் பணத்தை கொடுத்ததையும் போலீசார் விசாரணையில் கண்டுபிடித்து விட்டனர். இதுபோன்ற அடுக்கடுக்கான பல ஆதாரங்களை திரட்டியதால், போலீசாரிடம் இருந்து தஸ்னீமால் தப்ப முடியவில்லை.

ரியாஸ் அகமதுவிடம் இருந்து ரூ.44 லட்சம் ரொக்கப்பணத்தை போலீசார் மீட்டனர். ரியாஸ் அகமது சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்தவர். 10-வது வகுப்பு வரை படித்துள்ள இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். திருமணம் ஆகாதவர். இந்த பணத்தின் மூலம் வசதியான வாழ்க்கை அமைத்துக்கொள்ள அவர் திட்டம் தீட்டியதாக தெரிகிறது.

மேலும் 2 குழந்தைகளுக்கு தாயான தஸ்னீமை தான் திருமணம் செய்து கொள்ளவும் ரியாஸ் அகமது திட்டம் தீட்டி செயல்பட்டுள்ளார்.

தஸ்னீமிடம் நெருக்கமாக பழகி, பணத்தை கறந்துள்ளார். ரியாசின் பேச்சை கேட்டு பணத்தை திருடிக்கொண்டு வந்து கொடுத்ததால் தஸ்னீமும், பணத்தை வாங்கியதால் ரியாஸ் அகமதுவும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

முகநூல் மூலம் ஏற்பட்ட தவறான பழக்கம், கவுரவமான குடும்பத்தைச் சேர்ந்த தஸ்னீமை, சொந்த வீட்டிலேயே திருடி, தனது நண்பருக்கு கொடுக்கும் அளவுக்கு அவரை படுகுழியில் தள்ளி விட்டது, என்று போலீசார் வருத்தத்துடன் குறிப்பிட்டனர்.
Tags:    

Similar News