வழிபாடு
திருப்பாவை பாசுரத்துக்கு ஏற்ப புள்ளரையன் (கருட வாகனன்) அலங்காரம் செய்யப்பட்டிருந்த காட்சி.

ஸ்ரீரங்கம் கோவிலில் தங்கக்குதிரையில் நம்பெருமாள் வையாளி கண்டருளினார்

Published On 2021-12-22 05:33 GMT   |   Update On 2021-12-22 05:33 GMT
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடந்த திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியில் தங்கக்குதிரை வாகனத்தில் நம்பெருமாள் வையாளி கண்டருளினார்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த மாதம் 3-ந்தேதி திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 4-ந்தேதி பகல்பத்து உற்சவத்தின் முதல் நாள் திருமொழி திருநாள் தொடங்கியது.

பகல்பத்து உற்சவத்தின் 10-வது நாளான 13-ந்தேதி நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். 14-ந்தேதி ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும். அன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. ராப்பத்து உற்சவத்தின் 7-ம் நாளான நேற்று முன்தினம் நம்பெருமாள் திருக்கைத்தல சேவை நடைபெற்றது.

ராப்பத்து உற்சவத்தின் 8-ம் நாளான நேற்று திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி கோவில் நாலாம் பிரகாரத்தின் கிழக்கில் உள்ள மணல்வெளியில் நடைபெற்றது. அப்போது நம்பெருமாள் தங்கக்குதிரை வாகனத்தில் மணல்வெளியில் ஓடியாடி, வையாளி கண்டருளினார். இந்த காட்சியை திரளான பக்தர்கள் பரவசத்தோடு கண்டு நம்பெருமாளை வணங்கினர்.

இதையொட்டி மாலை 5 மணிக்கு சந்தனு மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் தங்கக்குதிரை வாகனத்தில் புறப்பட்டு மணல்வெளி வந்தடைந்தார். அங்கு மாலை 5.30 மணிமுதல் மாலை 6 மணிவரை வையாளி கண்டருளினார். பின்னர் இரவு 7.30 மணிக்கு திருமாமணி மண்டபம் சென்றடைந்தார். அங்கு இரவு 8.15 மணி முதல் இரவு 9.30 மணிவரை உபயகாரர் மரியாதையுடன் பொதுஜனசேவையும் நடைபெற்றது. இரவு 11 மணிக்கு திருமாமணி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் நம்பெருமாள் இரவு 12.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

திருமாலுக்கு தொண்டு செய்தே தனது செல்வத்தை இழந்த திருமங்கை மன்னன், தனது பெருமாள் கைங்கர்யம் தொடர வழிப்பறியில் ஈடுபட்டு வந்தார். இவரை தடுத்தாட்கொள்ள விரும்பிய பெருமாள் அவரிடம் சிறிதுநேரம் விளையாட்டு காட்டி பின் அவரது காதில் ஓம்நமோ நாராயணாய எனும் மந்திரத்தை தானே உபதேசித்து ஆட்கொண்ட விதம் வேடுபறியாகும். வேடுபறி நிகழ்ச்சியின் ஒருபகுதி பக்தர்கள் முன்னிலையில் நேற்று நடத்திகாட்டப்பட்டது.

இதையடுத்து திருமங்கை மன்னன் மரபில் வந்தவர்கள் என்று கூறப்படும் ஸ்ரீரங்கம் தெப்பக்குளத்தெரு காவல்காரர் குடும்பத்தினர் மற்றும் அவர்தம் உறவினர்களுக்கு பெருமாள் சார்பில் மரியாதை வழங்கப்பட்டது. விழாவின் 10-ம் நாளான நாளை (வியாழக்கிழமை) தீர்த்தவாரியும், 24- ந்தேதி நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியுடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவடைகிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் கந்தசாமி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.
Tags:    

Similar News