செய்திகள்
ரஜினிகாந்த்

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது தமிழகத்துக்கு சாபக்கேடு- பி.ஆர்.பாண்டியன்

Published On 2020-03-13 11:49 GMT   |   Update On 2020-03-13 11:49 GMT
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது தமிழகத்துக்கு சாபக்கேடு என்றும் திரைப்படத்தை தனது சொந்த லாபத்துக்காக பயன்படுத்துகிறார் என்றும் பி.ஆர்.பாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார்.
தஞ்சாவூர்:

தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பி.ஆர். பாண்டியன் தஞ்சையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பதை மட்டும் தொடர வேண்டும். அரசியலுக்கு வருவேன் என கூறி அவரை நம்பி இருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களை ஏமாற்ற கூடாது. அரசியலுக்கு வருகிறேன் என்று அவர் கூறுவதை தமிழக விவசாயிகள் ஏற்கமாட்டார்கள். ஏற்கனவே சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்த எம்.ஜி.ஆர். மக்கள் பிரச்சனைகளை பேசி, அதில் வெற்றி பெற்று அரசியலிலும் வெற்றி கண்டார்.

ஆனால் ரஜினிகாந்தோ மக்கள் பிரச்சனைகளை பற்றி பேசாமல் இளைஞர்களை கெட்ட வழிக்கு கொண்டு செல்லும் வகையில் தான் தன்னுடைய படங்களில் நடித்துள்ளார். ரஜினிகாந்த்துக்கும், தமிழக அரசியலுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. காவிரி பிரச்சனை பற்றி அவர் வாய் திறக்கவில்லை. கடும் வறட்சியால் 400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். இது தொடர்பாக ஒரு குடும்பத்தையாவது நேரில் சந்தித்து ரஜினி ஆறுதல் கூறினாரா? அதுபோல் தானே புயல், கஜா புயல், ஒக்கி புயல் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களின் போது களத்தில் நின்றாரா? அல்லது பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தாரா? இப்படி பல கேள்விகளுக்கு விவசாயிகள், மக்களை அவர் சந்திக்கவில்லை என்பது தான் உண்மையாகும்.

மேலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராடவில்லை. டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவித்தது. இதை பற்றி மத்திய அரசிடம் எடுத்து கூறி கொள்கை முடிவு எடுக்க முன்வந்தாரா? இப்படி எதையுமே மக்களுக்காக செய்யாமல், ஆட்சி மாற்றம் ஒன்றுதான் என்னை ஆட்சி கட்டிலில் அமர வைக்கும் என்று சொல்ல அவருக்கு என்ன தகுதி இருக்கிறது?.

அவர் அரசியலுக்கு வருவது தமிழகத்துக்கு சாபக்கேடு. திரைப்படத்தை தனது சொந்த லாபத்துக்காக பயன்படுத்துகிறார். ரசிகர்களை அவ்வப்போது ஆசைகாட்டி மோசம் செய்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News