செய்திகள்
வீரப்ப மொய்லி

பிரசாந்த் கிஷோரை சேர்ப்பது காங்கிரசுக்கு நல்லது- வீரப்ப மொய்லி பரபரப்பு பேட்டி

Published On 2021-09-13 03:21 GMT   |   Update On 2021-09-13 04:29 GMT
பா.ஜனதாவை எதிர்க்கும் சக்திகளுக்கு முதுகெலும்பாக காங்கிரஸ் திகழ்கிறது என்று வீரப்ப மொய்லி கூறினாா்.
புதுடெல்லி:

கடந்த ஆண்டு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் 23 பேர், கட்சி கட்டமைப்பை முழுமையாக மாற்றி அமைக்குமாறு கட்சி தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினர். ஜி-23 என்று அழைக்கப்படும் அவர்களில் வீரப்ப மொய்லியும் ஒருவர்.

இருப்பினும், பின்னர், சோனியா காந்திக்கு ஆதரவாக அவர் செயல்பட்டு வருகிறார். இந்தநிலையில், அரசியல் நிலவரம் குறித்து அவர் நேற்று ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கட்சிக்குள் இருந்தபடியே சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்பதற்காகத்தான் ஜி-23 குழுவை சேர்ந்த எங்களில் சிலர் கடிதம் எழுதினோம். ஆனால், சோனியா காந்தியே அடிமட்ட அளவில் இருந்து சீர்திருத்தங்களை செய்ய முடிவு எடுத்தார். அவர் துடிப்பாக செயல்படுகிறார். கட்சிக்கு பெரிய ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று நான் கூறியதை சோனியாவே செய்து வருகிறார்.

அதையடுத்து என்னை போன்றவர்கள், ஜி-23 குழுவில் இருந்து விலகி விட்டோம். அக்குழு தேவையற்றதாகி விட்டது. இன்னும் அக்குழுவில் விடாப்பிடியாக இருக்கும் தலைவர்கள், காங்கிரசுக்கு எதிராக செயல்படுவதாகத்தான் அர்த்தம். அவர்கள் அக்குழுவை தவறாக பயன்படுத்துகின்றனர்.

தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், பல மாநிலங்களில் வெற்றிகரமாக செயல்பட்டுள்ளாா். அவர் கட்சிக்கு வெளியில் இருந்து சீர்திருத்தங்களை செய்வதற்கு பதிலாக, கட்சிக்கு உள்ளே இருந்து செயல்பட வேண்டும். எனவே, அவரை காங்கிரசில் சேர்ப்பது கட்சிக்கு நல்லது.

அவர் காங்கிரசுக்கு எழுச்சியை ஏற்படுத்துவாா். அவரை சேர்க்கக்கூடாது என்று எதிர்க்கும் மூத்த தலைவர்கள், கட்சி சீர்திருத்தங்களுக்கு எதிராக செயல்படுவதாக அர்த்தம்.

காங்கிரசுக்கு தலைமை தாங்க ராகுல்காந்தி பொருத்தமானவர். இருப்பினும், கட்சியை சீரமைப்பதுதான் இப்போது முக்கியம்.

பா.ஜனதாவை எதிர்க்கும் சக்திகளுக்கு முதுகெலும்பாக காங்கிரஸ் திகழ்கிறது. பல மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் எதிர்க்கட்சி, காங்கிரஸ்தான். இதை சரத்பவாரும் கூறியுள்ளார். காங்கிரஸ் தலைமையில் மக்கள் அரசியல் புரட்சி ஏற்படுத்துவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News