ஆன்மிகம்
முத்துமாரியம்மன்

காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா 9-ந்தேதி தொடக்கம்

Published On 2021-03-04 08:16 GMT   |   Update On 2021-03-04 08:16 GMT
காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவில் மாசி-பங்குனி திருவிழா வருகிற 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
காரைக்குடி மீனாட்சிபுரத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி-பங்குனி திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். மேலும் இந்த விழாவின் போது பால்குட திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்துவது தனிச்சிறப்பாகும். இதையொட்டி இந்தாண்டு விழா வருகிற 9-ந் தேதி காலை கொடியேற்றத்துடன் நடக்கிறது.

அத்துடன் அன்று காலை 4.15 மணிக்கு கணபதி பூஜையுடன் விழா தொடங்குகிறது. தொடர்ந்து 5.45 மணிக்கு கொடியேற்றமும், தொடர்ந்து 6.30 மணிக்கு மேல் காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.

அதையடுத்து பால்குடம், காவடி, வேல் போடுதல், பூக்குழி இறங்குதல், தீச்சட்டி எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன் எடுக்க உள்ள பக்தர்களும் காப்புக்கட்டி விரதம் இருக்க தொடங்குவார்கள். தொடர்ந்து வரும் 16-ந் தேதி இரவு 7 மணிக்கு மேல் காரைக்குடி முத்தாலம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள் முளைப்பாரி எடுக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

மறுநாள் 17-ந் தேதி காலையில் கரகம் எடுத்தல், பால்குடம், பறவை காவடி, வேல் போடுதல், பூக்குழி இறங்குதல் உள்ளிட்ட நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் காரைக்குடி முத்தாலம்மன் கோவிலில் இருந்து எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்த உள்ளனர். பால்குட திருவிழாவின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் மஞ்சள் நிற ஆடை அணிந்து கூட்டம், கூட்டமாக பால்குடம் சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்துவது தனிச்சிறப்பாக இருக்கும்.

அன்று மாலை 5 மணிக்கு கரகம் மற்றும் முளைப்பாரி ஆகியவை பருப்பூரணியில் கரைத்தல் நிகழ்ச்சி நடைபெறும். வரும் 18-ந் தேதி அம்பாள் திருவீதி உலாவும், மறுநாள் 19-ந் தேதி மாலை 4 மணிக்கு சந்தனக்காப்பு அலங்காரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை தக்கர், உதவி ஆணையர் சிவலிங்கம், செயல் அலுவலர் சுமதி, கோவில் கணக்கர் அழகுபாண்டி ஆகியோர் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News