ஆன்மிகம்
திருப்பரங்குன்றம் முருகன் கோவில்

திருப்பரங்குன்றம் கோவிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா 2-ந்தேதி தொடங்குகிறது

Published On 2019-11-30 06:27 GMT   |   Update On 2019-11-30 06:27 GMT
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வருகிற 2-ந் தேதி கொடியேற்றத்துடன் திருக்கார்த்திகை தீபத்திருவிழா தொடங்குகிறது. 10-ந்தேதி மாலை 6 மணிக்கு மலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

அதன்படி வருகிற 2-ந்தேதி காலை 9.45 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் மகரம் லக்னத்தில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவையொட்டி தினமும் காலையில் தங்க சப்பரத்திலும், இரவில் தினமும் ஒரு வாகனத்திலுமாக தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளி நகர் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 9-ந் தேதி இரவு 7 மணி முதல் 7.30 மணிக்குள் மிதுன லக்னத்தில் கோவிலுக்குள் உள்ள 6 கால் மண்டபத்தில் முருகப்பெருமானுக்கு நவரத்தினங்களிலான செங்கோல் சாற்றி பட்டாபிஷேகம் நடக்கிறது.

திருவிழாவின் விசேஷ நிகழ்ச்சியாக 10-ந் தேதி திருக்கார்த்திகை தினமாகும். அன்று காலை 10.15 மணிக்கு மேல் 11..15 மணிக்குள் தேரோட்டம் நடக்கிறது. சன்னதி தெருவில் உள்ள 16 கால் மண்டபம் அருகில் இருந்து நகரின் நான்கு முக்கிய வீதிகளில் தேர் வலம் வர உள்ளது.

விழாவின் சிகர நிகழ்ச்சியாக அன்று மாலை 6 மணிக்கு மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் வளாகத்தில் தீப மேடையில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதற்காக கோவிலில் 3½ அடி உயரமும் 2½ அடி அகலமும் கொண்ட தாமிரகொப்பரை மெருகு ஏற்றப்பட உள்ளது.

மேலும் 100 மீட்டர் காடா துணியிலான திரி, 300 லிட்டர் நெய் பயன்படுத்தப்பட உள்ளது. மேலும் இரவு 7 மணி அளவில் 16 கால் மண்டபம் அருகே சொக்கப்பனை கொளுத்துதல் நடக்கவுள்ளது. 11-ந் தேதி காலையில் தீர்த்த உற்சவம் நடக்கிறது.
Tags:    

Similar News