செய்திகள்
அறுவடை செய்த முந்திரி பழத்தில் இருந்து கொட்டைகளை பிரித்து எடுக்கும் பணியில் மூதாட்டி.

கொள்ளிடம் பகுதியில் முந்திரி அறுவடை பணி தீவிரம்- மகசூல் குறைந்ததால் விவசாயிகள் கவலை

Published On 2021-04-29 12:02 GMT   |   Update On 2021-04-29 12:02 GMT
கொள்ளிடம் பகுதியில் முந்திரி அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மகசூல் குறைந்ததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
கொள்ளிடம்:

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கடலோர பகுதிகளான புதுப்பட்டினம், தாண்டவன்குளம், பழையபாளையம், ஆலங்காடு, வேட்டங்குடி, எடமணல், கூழையார், தொடுவாய், திருமுல்லைவாசல், ஆகிய பகுதிகளில் சுமார் 600 ஏக்கர் நிலப்பரப்பில் முந்திரி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

தற்போது முந்திரி காய்த்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. தற்போது விவசாயிகள் முந்திரி பழங்களை அறுவடை செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், முந்திரி சாகுபடிக்கு அதிக தண்ணீர் தேவை இல்லை. வறட்சியை தாங்கி வளரக்கூடியது. தற்போது இங்கு விளைவிக்கும் முந்திரி பண்ருட்டிக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து பதப்படுத்தப்பட்டு திருப்பதிக்கு லட்டு செய்வதற்காக அனுப்பப்படுகிறது.

கொள்ளிடம் பகுதியில் அதிகமாக முந்திரி சாகுபடி செய்துள்ளோம். கடந்த ஆண்டு நல்ல மகசூல் என்பதால் ஒரு ஏக்கருக்கு 8 குவிண்டால் வரை முந்திரி கொட்டை கிடைத்தது. அப்போது குவிண்டால் ரூ.9 ஆயிரம் வரை விற்பனை செய்தோம். தற்போது விளைச்சல் குறைந்து விட்டது. இதனால் ஒரு ஏக்கருக்கு 6 குவிண்டால் மட்டுமே மகசூல் கிடைத்துள்ளது. விலையும் குறைந்து ரூ.7 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.

விலை குறைந்ததற்கு காரணம் கொரோனா தொற்று கட்டுப்பாட்டால் வியாபாரிகள் அதிகமாக வருவது இல்லை. இதனால் விலை குறைந்து விட்டது. மேலும் பூக்கள் அதிகமாக கருகி வருவதால், விளைச்சல் மிகவும் குறைந்து விடும் என்பதால் எங்களுக்கு கவலையாக உள்ளது என்றனர்.
Tags:    

Similar News