செய்திகள்
கொரோனா வைரஸ்

‘கொரோனா’ தொற்று இல்லாத மாவட்டமாக மாறும் அரியலூர்

Published On 2020-12-01 08:37 GMT   |   Update On 2020-12-01 08:37 GMT
பெரம்பலூரை தொடர்ந்து ‘கொரோனா’ தொற்று இல்லாத மாவட்டமாக அரியலூர் மாறியுள்ளது.
அரியலூர்:

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதத்தில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. சிறிய மாவட்டங்களான பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களிலும் மக்கள் தொற்றுக்கு ஆளாகினர். இதையடுத்து பெரம்பலூரில் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.

சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, காவல்துறையின் ஒருங்கிணைந்த முயற்சியால் நோய் விரைவில் கட்டுக்குள் வந்தது.

கடந்த நவம்பர் 16-ந்தேதி பெரம்பலூர் மாவட்டம் புதிய தொற்று இல்லாத நாளாக மாறியது. அன்றைய தினம் வரை மாவட்டம் முழுவதும் மொத்தம் 2,228 பேர் தொற்றுக்கு ஆளாகி இருந்தனர். அதன்பின்னர் இந்த 15 தினங்களில் வெறும் 8 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினமும் பெரம்பலூரில் புதிய தொற்று எதுவும் இல்லை. நேற்று 450 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் ஒருவருக்கு கூட புதிய நோய் தொற்று கிடையாது.

இன்றைய நிலவரப்படி பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 56 ஆயிரத்து 964 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 2,236 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் கீதா தெரிவித்தார்.

மேலும் அவர் கூறும் போது, தொடர்ச்சியாக கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாற்ற முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம். அந்த இலக்கை விரைவில் எட்டுவோம் என நம்பிக்கை தெரிவித்தார்.

இந்தநிலையில் தற்போது பெரம்பலூரை தொடர்ந்து அரியலூர் மாவட்டமும் தொற்று இல்லாத மாவட்டமாக நேற்று மாறியது. நேற்றைய பரிசோதனை முடிவில் அரியலூரில் ஒருவர் கூட கொரோனாவால் கண்டறியப்படவில்லை. இது சுகாதாரத்துறைக்கு எல்லையில்லா மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் தொழில்வளம் இல்லாத மாவட்டமாக இருக்கிறது. இங்குள்ள சிமெண்ட் தொழிற்சாலையை தவிர்த்து வேறு எந்த தொழில்வளமும் இல்லை. இங்குள்ள தொழிலாளர்கள் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் அதிகம் வேலை செய்து வருகின்றனர். ஆரம்பத்தில் கோயம்பேடு மார்க்கெட் மூலம் வைரஸ் வேகமாக பரவியது. இதையடுத்து மார்க்கெட்டில் வேலை செய்தவர்கள் சொந்த ஊர் திரும்பினர்.

அரியலூர் தொழிலாளர்களும் சொந்த ஊருக்கு படையெடுத்து வந்தனர். பின்னர் அவர்கள் தங்களை பரிசோதனைக்கு உட்படுத்தாமல் வீடுகளுக்கு சென்றனர். இதனால் அவர்களின் குடும்ப அங்கத்தினரும் வைரசுக்கு ஆளாக நேரிட்டது. ஒரே நாளில் கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து திரும்பியவர்கள் மற்றும் அவர்களின் தொடர்புகளால் 188 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இது சுகாதாரத்துறைக்கு அதிர்ச்சி அளிப்பதாக அமைந்தது. அதன் பின்னர் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதனால் படிப்படியாக தொற்றுகள் குறைந்து நேற்றைய தினம் தொற்று இல்லாத மாவட்டமாக அரியலூர் மாறியுள்ளது.

இந்த மாவட்டத்தை பொறுத்தமட்டில் இதுவரை 4,564 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 4,426 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 48 பேர் உயிரிழந்துள்ளனர். எஞ்சிய 88 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

இதுபற்றி சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது, திட்டமிடப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள், குறைக்கப்படாத பரிசோதனைகளால் அரியலூரில் நோய் கட்டுக்குள் வந்துள்ளது. தமிழக சுகாதாரத்துறை மூலம் தொற்று இல்லாத மாவட்டமாக அரியலூரை விரைவில் அறிவிக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்றனர்.
Tags:    

Similar News