செய்திகள்
பூபேந்தர் சிங் மான்

வேளாண் சட்டங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றம் அமைத்த 4 பேர் குழுவிலிருந்து பூபேந்தர் சிங் மான் விலகல்

Published On 2021-01-14 11:37 GMT   |   Update On 2021-01-14 11:37 GMT
உச்சநீதிமன்றம் அமைத்த வேளாண் சட்டங்கள் தொர்பான குழுவில் இருந்து பூபேந்தர் சிங் மான் விலகியுள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண்மை சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி விவசாயிகள் டெல்லியில் தொடர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் நடந்த வழக்கில் நேற்றுமுன்தினம் நீதிபதிகள் முக்கிய உத்தரவுகளை பிறப்பித்தனர்.

3 வேளாண்மை சட்டங்களையும் நிறுத்தி வைத்தும், விவசாயிகளுடன் பேசி தீர்வு காண்பதற்கு 4 பேர் கொண்ட குழுவை அமைத்தும் உத்தரவிட்டனர். இந்த குழுவில் பூபிந்தர் சிங் மான், பிரேம்குமார் ஜோஷி, அசோக் குலாரி, அனில் கான்வாட் ஆகியோர் இடம் பெறுவதாக அறிவிக்கப்பட்டது.

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவையடுத்து விவசாயிகள் தங்கள் போராட்டத்தை நிறுத்துவதற்கு முன் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விவசாயிகள் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை ஏற்க மறுத்துள்ளனர். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்ததுமே தங்கள் தரப்பு வக்கீல்களுடன் விவசாய சங்கத்தினர் ஆலோசனை நடத்தினார்கள். சுப்ரீம் கோர்ட்டு இந்த சட்டங்களை நிறுத்தி வைத்து இருப்பதை நாங்கள் வரவேற்கிறோம். அதே நேரத்தில் சட்டங்களை முழுமையாக விலக்க வேண்டும் என்பதுதான் எங்களது ஒரே கோரிக்கை. அது நிறைவேற்றப்படாமல் இருக்கிறது.

4 பேர் கொண்ட குழுவை அமைத்து இருப்பதையும் நாங்கள் ஏற்க முடியாது. ஏனென்றால் இந்த குழுவில் இடம்பெற்றுள்ள 4 பேருமே விவசாய சட்டங்களுக்கு ஆதரவாக இருந்தவர்கள். அவர்கள் இந்த சட்டங்களை ஆதரித்து பல கட்டுரைகளை எழுதி இருக்கிறார்கள். கருத்துகளை கூறி இருக்கிறார்கள்.

அவர்களை வைத்து குழு அமைத்ததை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? இந்த வி‌ஷயத்தில் மத்திய அரசின் சூழ்ச்சி இடம்பெற்றதாக கருதுகிறோம் என விவசாயி சங்கங்கள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், வேளாண் சட்டங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றம் அமைத்த 4 பேர் குழுவிலிருந்து பூபேந்தர் சிங் மான் விலகியுள்ளார். பஞ்சாப் விவசாயிகள் நலனுக்காக துணை நிற்வேன் என அவர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News