செய்திகள்
நிகழ்ச்சியில் மாணவிக்கு சட்ட விழிப்புணர்வு நோட்டீசை நீதிபதி அனுராதா வழங்கிய காட்சி.

அடிப்படை சட்ட அறிவை தெரிந்து கொள்ள வேண்டும் - மாணவர்களுக்கு நீதிபதி அறிவுரை

Published On 2021-10-23 09:51 GMT   |   Update On 2021-10-23 09:51 GMT
சமூக ஊடகங்களின் மீதான கவன ஈர்ப்பு போன்றவற்றில் இருந்து விழிப்புணர்வுடன் தற்காத்து கொள்ள வேண்டும் என நீதிபதி அறிவுறுத்தினார்.
திருப்பூர்:

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் 25-வது வெள்ளிவிழா ஆண்டை யொட்டி திருப்பூர் பத்மாவதிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.  நிகழ்ச்சியில் உதயசங்கர் வரவேற்றார்.   

சட்டப்பணிகள் ஆணைக்குழு நோக்கம், பயன்பாடுகள் பற்றி இலவச சட்ட உதவி மைய வக்கீல் திங்களவள் விரிவாக பேசினார். 2-வது கூடுதல் மாவட்ட நீதிபதி அனுராதா தலைமை தாங்கி பேசினார். அவர் பேசுகையில், மாணவ பருவம் என்பது பட்டாம் பூச்சிகளை போன்ற சிறகடித்து பறக்கக்கூடிய அருமையான பருவம்.

இப்பருவத்தில் மிகச்சிறிய கடமைகளான பாடங்களை படிப்பது, தேர்ச்சி பெறுவது, பெற்றோர்களுக்கு உதவிகள் செய்வது போன்றவை மட்டும் தான். அதன்பிறகு வரக்கூடிய பொறுப்புகளான குடும்பத்தை பொருளாதார ரீதியாக  கவனிப்பது, தனக்குரிய லட்சியங்களை அடைவது என நிறைய பொறுப்புகள் உள்ளன. 

இந்த பருவத்தில் ஏற்படும் இனக்கவர்ச்சி, சமூக ஊடகங்களின் மீதான கவன ஈர்ப்பு போன்றவற்றில் இருந்து விழிப்புணர்வுடன் தன்னை தற்காத்து கொள்ள வேண்டும். அப்துல்கலாம், ஐன்ஸ்டைன் போன்ற அறிஞர்களாவதற்கும், எங்களை போன்று வக்கீல்களாகவும், நீதிபதிகளாகவும் ஆவதற்கு வாழ்த்துக்கள்.

மருத்துவமனை, திரையரங்குகள், மதுக்கடைகள் போன்றவற்றை மட்டும் கேட்டவுடன் நினைவு கூறத்தக்க அளவில் உள்ளது. போலீஸ் நிலையம், நீதிமன்றம் போன்றவை நம்மில் பெரும்பாலானோருக்கு எங்கு இருக்கிறது என்பது பற்றியும், அடிப்படை சட்ட அறிவையும் பெற்றோர்கள் ஊட்டுவதில்லை.  

தாலுகா, மாவட்டம், மாநிலம் போன்ற பல்வேறு பகுதிகளில் நீதிமன்றங்கள், இலவச சட்ட உதவி மையங்கள் போன்றவை செயல்படுகின்றன. அதன் நோக்கங்களையும், மக்களுக்கு எந்த வகையில் பயனளிக்கிறது என்பதையும் மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். 

அடிப்படை சட்ட அறிவை நாம் அறிந்து கொள்வதன் மூலமே நம்முடைய உரிமைகள், கடமைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ள முடியும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் மனோன்மணி நன்றி கூறினார்.
Tags:    

Similar News