செய்திகள்
முன்னாள் மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம்

74 வயது இளைஞனாக உணர்கிறேன் - பிறந்த நாளில் ப.சிதம்பரம் மகிழ்ச்சி

Published On 2019-09-16 22:57 GMT   |   Update On 2019-09-16 22:57 GMT
என் நண்பர்கள், கட்சியை சேர்ந்த சக தலைவர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் வாழ்த்துகளை எனது குடும்பத்தினர் என்னிடம் தெரிவித்ததற்கு அனைவருக்கும் நன்றி என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரத்துக்கு நேற்று 74-வது பிறந்த நாள் ஆகும். இதையொட்டி அவருக்கு மகன் கார்த்தி சிதம்பரம் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அவர்கள் அனைவருக்கும் ப.சிதம்பரம் நன்றி தெரிவித்து டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

‘பின்வருபவற்றை என் சார்பாக டுவிட்டரில் பகிருமாறு எனது குடும்பத்தினரை கேட்டுக்கொள்கிறேன்’ என்று அவர் வெளியிட்டு இருக்கும் அந்த செய்தியில், ‘என் நண்பர்கள், கட்சியை சேர்ந்த சக தலைவர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் வாழ்த்துகளை எனது குடும்பத்தினர் என்னிடம் தெரிவித்தனர். எனக்கு 74 வயதாகிறது என்று நினைவூட்டப்பட்டேன். உண்மையில், 74 வயது இளைஞர் என்றுதான் நான் உணர்கிறேன். எனது பலம் அதிகரிக்கிறது. அனைவருக்கும் நன்றி’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதைப்போல நாட்டின் பொருளாதார மந்த நிலை குறித்தே தனது எண்ணம் எல்லாம் இருப்பதாக மற்றொரு பதிவில் அவர் கவலை வெளியிட்டு உள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘வெறும் ஒரு புள்ளிவிவரமே ஒட்டுமொத்த பொருளாதார நிலையையும் தெரிவித்து உள்ளது. அதாவது ஆகஸ்டு மாத ஏற்றுமதி வளர்ச்சி விகிதம் மைனஸ் 6.05 ஆக இருக்கிறது. ஏற்றுமதி வளர்ச்சி விகிதம் ஆண்டுக்கு 20 சதவீதத்தை எட்டாத எந்த நாடும் 8 சதவீத ஜி.டி.பி.யை எட்டியதில்லை. இந்த நாட்டை கடவுள் ஆசீர்வதிக்கட்டும்’ என்று தெரிவித்து இருந்தார்.
Tags:    

Similar News