ஆன்மிகம்

உயர்பண்புகள் என்றும் தோற்பது இல்லை

Published On 2019-06-21 04:19 GMT   |   Update On 2019-06-21 04:19 GMT
நபிகளார் வலிவுறுத்தும் இத்தகைய உன்னத உயர் பண்புகள் உலகில் என்றுமே தோற்பது இல்லை. அவைகள் வெற்றியை நோக்கி பயணித்துக் கொண்டே இருக்கும்.
ஒரு நாள் இரவு நபிகளார் கனவொன்று கண்டார்கள், அக்கனவில் க அபாவின் திறவுகோல் தமது கையில் இருப்பதாகவும், க அபாவினுள் நபிகளார் நுழைவதாகவும் அது அமைந்து இருந்தது. இதையடுத்த அண்ணலார் தமது தோழர்களை தன்னுடன் புனித யாத்திரை செல்ல வருமாறு அழைப்பு விடுத்தார்கள்.

யாத்திரையின் போது போருக்கான ஆயுதங்களை எடுத்துச் செல்ல அனுமதி மறுத்த நபிகளார், தத்தமது வாளையும் வேட்டைக்கு தேவையான சில ஆயுதங்களை மட்டுமே உடன் எடுத்துச் செல்ல அனுமதித்தார்கள்.

நபிகளாரின் தலைமையில் புனித யாத்திரை குழு ஒன்று மதீனாவை விட்டு புறப்பட்டு வருவதை அறிந்த மக்காவின் குரைஷிகள் குலத்தவர்கள் சஞ்சலத்தில் குழம்பி போய் இருந்தார்கள்.

க அபாவை நோக்கி வரும் யாத்திரையாளர்களை தடுப்பது என்பது புனித மரபுக்கு முரணாகி விடும். அதேவேளை நபிகளாரின் குழுவை புனித யாத்திரை செய்ய அனுமதித்தால் அது நபிகளாருக்கு பெரும் வெற்றியாக அமைந்து விடும். இத்தகைய தர்ம சங்கடத்தில் குரைஷியர் இருந்த போதிலும் காலித் இப்னு வலித் தலைமையின் கீழ் 200 குதிரைப்படை வீரர்களை தயார் நிலையில் நிறுத்தி வைத்தனர்.

இதை அறிந்த நபிகளார் மோதலை தவிர்ப்பதற்காக மாற்றுபாதை வழியாக மக்கா அருகில் உள்ள ஹுதைபியா என்ற இடத்தில் வந்து முகாமிட்டார்கள். இதை அறிந்த குரைஷிகள் தங்களது நிலைபாட்டைச் கூறிட புதைல் இப்னு வர்கா என்பவரை அனுப்பி வைத்தார்கள்.

நபிகளாரை சந்தித்த அவர், ‘குரைஷிகளின் கடைசி மனிதர் எஞ்சி இருக்கும் வரை உங்களை நாங்கள் புனித யாத்திரை செய்ய அனுமதிக்க மாட்டோம்’ என்றார்.

அதற்கு நபிகளார், ‘நாங்கள் இங்கு யுத்தம் புரியும் நோக்கத்தில் வரவில்லை. இறை இல்லத்தை தரிசிக்கவே வந்துள்ளோம். அதனை தடுப்பவர் எவராயினும் அதனை எதிர்த்து நின்று நாங்கள் போராடுவோம்’ என்றார்கள்.

புதைல் இச்செய்தியை குரைஷியரிடம் சென்று கூறிவிட்டு ‘முஹம்மத் சாந்தமான நோக்கத்தோடே இங்கு வந்துள்ளார்’ என்றார்.

அதில் திருப்தியடையாத குரைஷியர்கள் நபிகளாரை வேவு பார்த்து உள்ளதை உள்ளபடி தெரிந்துவர உர்வா என்பவரை அனுப்பி வைத்தார்கள்.

உர்வா நபிகளாரை சந்தித்து உரையாடத் தொடங்கினார். பல்வேறு விஷயங்கள் குறித்து பேசிக்கொண்டே அங்கு நடப்பவற்றை கண்காணித்தார்.

பின் குரைஷியரிடம் வந்த உர்வா கூறினார், ‘நான் தூதுவராக கிஸ்ரா ஸீசர், நஜ்ஜாசி போன்ற பல அரசர் களையும் சந்தித்து வந்துள்ளேன். ஆனால் முஹம்மத் அவரது தோழர் களால் கண்ணியப்படுத்தப்படுவதை போன்று வேறு எவரும் உலகில் கண்ணியப்படுத்தபடவில்லை. அவரது கட்டளைகள் யாவும் உடனுக்குடன் நிறைவேற்றப்படுகிறது’ என்றார்.

இதன் பின்னர் குரைஷியர்களிடம் தூது பேச நபிகளார் உத்மான் (ரலி) யை அனுப்பி வைத்தார்கள். பேச்சுவார்த்தைக்கு சென்ற உத்மான் உயிருக்கு ஆபத்து நேர்ந்தால், இறுதிவரை போராட நபிகளார் தம் தோழர்களிடம் வாக்குறுதி பெற்றார்கள். இச்செய்தி அறிந்த குரைஷியர்கள் நபிகளாருடன் பேசி உடன்படிக்கை ஒன்றை செய்து கொள்ள சுஹைல் என்பவரை அனுப்பி வைத்தனர்.

நபிகளாருக்கும் சுஹைலுக்கும் இடையேயான இந்த ஒப்பந்த நிபந்தனைகளை எழுதிடும் பொறுப்பை நபிகளார் அலி (ரலி) யிடம் ஒப்படைத்தார்கள்.

‘பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர்ரஹீம்’ என்ற வாசகத்தில் உள்ள ‘ரஹ்மான், ரஹீம்’, போன்ற இறை நாமங்கள் ஒப்பந்தத்தில் இடம் பெறுவதையும், அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் என்ற வாசகத்தையும் ஏற்க மறுத்த சுஹைல் அதனை மாற்ற வேண்டும் என்றும் வாதிட்டார்.

அதனை ஏற்றுக்கொண்ட நபிகளார் ஒப்பந்தம் ‘பிஸ்மிக் அல்லாஹும்ம’ என்று தொடங்கிடவும், அல்லாஹ்வின் தூதர் என்பதற்கு பதிலாக ‘அப்துல்லாஹ்வின் மகன் முகம்மத்’ என்றும் மாற்றங்கள் செய்திடவும் நபிகளார் அனுமதித்தார்கள்.

இந்த உடன்படிக்கை தான் ஹுதைபியா உடன்படிக்கை என்று அழைக்கப்படுகிறது.

அந்த ஒப்பந்த பத்திரத்தின் இறுதி வாசகம் இவ்வாறு இருந்தது: ‘முஹம்மதே, நீர் இந்த வருடம் மக்காவை விட்டும் நீங்கிச் செல்ல வேண்டும். எனினும் எதிர்வரும் வருடத்தில் நாங்கள் மக்காவை விட்டும் வெளியேறி விடுவோம். நீர் உமது தோழர்களுடன் மக்காவினுள் நுழையலாம். 3 நாட்கள் தங்கிக் கொள்ளலாம். வாளும் உறையுமான பயண ஆயுதங்கள் தவிர்த்து வேறு ஆயுதங்கள் ஏதும் கொண்டு வரக்கூடாது’.

மிகுந்த ஆவலோடு க அபாவை வலம் வர ஆயிரத்திற்கும் அதிகமான தனது தோழர்களுடன் வந்த நபிகளார் யாத்திரையை ஹுதைபியாவுடன் நிறைவு செய்து மதீனா திரும்பினார்கள்.

உயர்ந்த லட்சியத்தை அடைய, வெற்றியை உறுதி செய்ய, வீணாக ரத்தம் சிந்தப்படுவதை தவிர்க்க, இணக்கமான சூழல் உருவாகிட, பல்வேறு கொள்கை உடையவர்கள் அமைதியாக இணங்கி வாழ உடன்படிக்கை என்பது மிக மிக அவசியமானது என்பதை நபிகளாரின் இந்த ஹுதைபியா உடன்படிக்கை உலகிற்க்கு உணர்த்தும் உன்னதமான செய்தியாகும்.

இந்த உடன்படிக்கையில் குரைஷி களின் பல கோரிக்கைகளையும் நபிகளார் ஏற்று வழிவிட்டது ஒரு பின்னடைவை போன்று முதலில் தோன்றினாலும் இறுதியில் நிறைவான வெற்றி நபிகளாருக்கே கிடைத்தது.

நபிகளார் வலிவுறுத்தும் இத்தகைய உன்னத உயர் பண்புகள் உலகில் என்றுமே தோற்பது இல்லை. அவைகள் வெற்றியை நோக்கி பயணித்துக் கொண்டே இருக்கும்.

மு. முகம்மது சலாகுதீன், ஏர்வாடி, நெல்லை மாவட்டம்.

Tags:    

Similar News