செய்திகள்
கோப்பு படம்

கர்நாடகாவில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

Published On 2021-04-07 10:27 GMT   |   Update On 2021-04-07 10:27 GMT
பெங்களூருவில் 7 ஆயிரம் அரசு பஸ்களில் தினமும் 30 லட்சம் பேர் பயணம் செய்வது வழக்கம். இந்த பஸ்கள் இயங்காததால், வேலைக்கு செல்பவர்கள், மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் என பலரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

பெங்களூர்:

கர்நாடகாவில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் தங்களுக்கு 6-வது ஊதிய குழு பரிந்துரையின்படி சம்பள உயர்வு வழங்க வேண்டும், தங்களை அரசு ஊழியர்களாக கருத வேண்டும் என்பன உள்பட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். போக்குவரத்து ஊழியர்கள் சங்க பிரதிநிதிகளுடன், அரசு பேச்சுவார்த்தை நடத்தியது.

இதில் அரசு ஊழியர்களாக கருத வேண்டும் என்ற கோரிக்கையை தவிர மற்ற 9 கோரிக்கைகளை 3 மாதத்திற்குள் நிறைவேற்றுவதாக அரசு எழுத்துப் பூர்வமான வாக்குறுதியை அளித்தது. இதையடுத்து போக்குவரத்து ஊழியர்கள் தங்களின் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றனர். ஆனால் அரசு அளித்த வாக்குறுதியின்படி தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்று ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும் சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்பட தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருகிற இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று போக்குவரத்து ஊழியர்கள் அறிவித்தனர்.

மாநிலத்தில் தற்போது இடைத்தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், சம்பள உயர்வு குறித்து தற்போது முடிவை அறிவிக்க முடியாது என்றும், அதனால் ஊழியர்கள் தங்களின் வேலை நிறுத்த போராட்ட முடிவை கைவிட வேண்டும் எனவும் அரசு தரப்பில் கூறப்பட்டது. ஆனால் திட்டமிட்டப்படி போக்கு வரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் இன்று (புதன்கிழமை) முதல் தொடங்கும் என்று அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் அறிவித்தனர்.

அதன்படி இன்று போக்குவரத்து கழக ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இதனால் அரசு போக்கு வரத்து கழகங்களில் இயக்கப்படும் 25 ஆயிரம் பஸ்கள் அந்தந்த டெப்போக்களிலேயே நிறுத்தப்பட்டன.

பெங்களூருவில் 7 ஆயிரம் அரசு பஸ்களில் தினமும் 30 லட்சம் பேர் பயணம் செய்வது வழக்கம். இந்த பஸ்கள் இயங்காததால், வேலைக்கு செல்பவர்கள், மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் என பலரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

கர்நாடக அரசு போக்கு வரத்துத்துறை வேலை நிறுத்தத்தை சமாளிக்க மாற்று ஏற்பாடுகளை செய்துள்ளது. தனியார் டிரைவர்கள் மற்றும் பயிற்சி ஓட்டுனர்களை வைத்து பஸ்களை இயக்க நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் போக்குவரத்து ஊழியர்கள் அனைவரும் இன்று கட்டாயம் பணிக்கு ஆஜராக வேண்டும் என்றும், தவறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவரத்து கழக அதிகாரி உத்தரவிட்டுள்ளார். அதே நேரத்தில் மெட்ரோ ரெயில்கள் வழக்கம் போல் இயங்கின. 

Tags:    

Similar News