வழிபாடு
கள்ளழகர்

கள்ளழகர் திருவிழாவிற்கு புதிய செல்போன் செயலி அறிமுகம்

Published On 2022-04-07 08:15 GMT   |   Update On 2022-04-07 08:15 GMT
சித்திரை திருவிழாவில் திருட்டை தடுக்க தனிப்படை, கள்ளழகர் திருவிழாவிற்கு புதிய செல்போன் செயலி அறிமுகம், ஆள்இல்லா விமானம் மூலம் கண்காணிப்பு என பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக சித்திரை திருவிழா கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதியின்றி நடத்தப்பட்டது. இந்தாண்டு கொரோனா கட்டுப்பாடுகள் நீங்கியதால் பக்தர்கள் பங்கேற்புடன் நடக்க உள்ளது. எனவே திருவிழா தொடங்கிய நாளில் இருந்து சுவாமியை பார்க்க பக்தர்கள் அதிகமாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது.

இது குறித்து போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் கூறியதாவது:-

2 ஆண்டுகளுக்கு பிறகு மீனாட்சி அம்மன் மற்றும் அழகர் கோவில் சித்திரை திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க உள்ளனர். இதில் மீனாட்சி திருக்கல்யாணம், தேர் திருவிழா, வைகை ஆற்றில் அழகர் இறங்குதல் போன்ற திருவிழாக்களில் அதிகமான பக்தர்கள் பங்கேற்பார்கள். எனவே மதுரை நகரில் பக்தர்களின் வசதிக்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.அதில் சுவாமி 4 மாசி வீதிகளில் காலை, இரவு வலம் வரும் நிகழ்ச்சிகளில் சுவாமியுடன் 2 உதவி போலீஸ் கமிஷனர் தலைமையில் 100 போலீசார் பாதுகாப்புக்காக செல்வார்கள்.

சுவாமி எங்கு சென்றாலும் அவர்கள் உடன் செல்வார்கள். இது தவிர விளக்குத்தூண், தெற்குவாசல், திடீர்நகர், திலகர்திடல் ஆகிய போலீஸ் நிலைய எல்லைக்குள் சுவாமி செல்லும் போது அந்தந்த காவல் நிலைய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். வருகிற 13-ந் தேதி திக்குவிஜயம் நடைபெறும் வரை இவ்வாறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். மேலும் இவர்கள் சங்கிலி பறிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்களையும் பிடிப்பார்கள். இதனை முதல் கட்ட பாதுகாப்பு என்று வகுத்து உள்ளோம்.

மீனாட்சி திருக்கல்யாணத்திற்கு 2-ம் கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை செயல்படுத்துவோம். அதில் அன்னதானம், இலவச குடிநீர், இலவச திருமாங்கல்யம் வழங்கும் இடங்களில் தான் அதிகமான கூட்டம் இருக்கும். அப்போது சங்கிலி பறிப்பு போன்ற சம்பவங்களில் பெண்கள் தான் அதிகம் ஈடுபடுவார்கள். அவர்களை கண்காணிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

திருக்கல்யாணத்திற்கு டிக்கெட் எடுத்தவர்கள் வடக்கு கோபுரத்திலும், இலவச தரிசனம் செய்பவர்கள் தெற்கு கோபுரத்திலும், முக்கிய பிரமுகர்கள், பாதுகாப்பு பணியில் உள்ளவர்கள் என அனைவரும் மேற்கு கோபுரம் வழியாக செல்ல போலீசார் அனுமதிப்பார்கள். திருக்கல்யாணம் முடியும் வரை பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் உள்ளே அனுமதிக்கப்படமாட்டார்கள். அதன்பின்னர் தான் பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்யலாம். இதற்காக கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

தேர் வீதி உலா மற்றும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியை 3-ம் கட்ட பாதுகாப்பாக செய்துள்ளோம். தேரோட்டத்தின் போது வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் குறிப்பிட்ட பகுதியில் நின்று தான் சுவாமியை தரிசனம் செய்வார்கள். எனவே கூட்டம் அதிகமாக உள்ள பகுதியில் ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்து பெண்களுக்கு பாதுகாப்பு குறித்த எச்சரிக்கை விடுக்கப்படும்.

குறிப்பாக தேர் திருவிழா மற்றும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் போது ஆள் இல்லா விமானம் மூலம் கண்காணிக்கப்படும். ஆள் இல்லா விமானம் மூலம் சித்திரை திருவிழாவை கண்காணிப்பது இந்தாண்டு தான் செயல்படுத்துகிறோம். இது தவிர மாசி வீதிகளில் 23 இடங்களில் உயர் கோபுரங்கள் மூலம் கண்காணிப்பு, 20 இடங்களில் எல்.இ.டி.டி.வி. அமைக்கப்படுகிறது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.மேலும் பக்தர்களுக்கு வழங்கப்படும் உணவு, மோர் உள்ளிட்டவை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்யப்படும். சாப்பாடு தட்டில் கொடுக்காமல் பொட்டலமாக கொடுக்கப்படும்.

அழகர் திருவிழாவில் மதுரை மாநகர போலீசார் இந்தாண்டு புதுமையாக செல்போன் செயலி ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளோம். அதில் அழகர் செல்லும் பாதை, மண்டகபடி இருக்கும் இடங்கள் பற்றியும், தேர் திருவிழா, திருக்கல்யாணம் ஆகிய நிகழ்ச்சிகளில் எங்கு வாகனங்களை நிறுத்தலாம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இடம் பெற்று இருக்கும்.

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குதல், எதிர்சேவை, தேர்திருவிழாவிற்காக கூடுதலாக 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சங்கிலி பறிப்பை தடுக்க 25 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் சாதாரண உடையில் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கண்காணிப்பார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News