செய்திகள்
திக்ரி எல்லையில் போலீஸ் பாதுகாப்பு

விவசாயிகள் போராட்டத்தால் டெல்லியின் முக்கிய எல்லைகள் மூடப்பட்டன- போக்குவரத்து மாற்றம்

Published On 2021-02-15 05:55 GMT   |   Update On 2021-02-15 05:55 GMT
விவசாயிகளின் போராட்டம் காரணமாக டெல்லியின் முக்கிய எல்லைகள் மூடப்பட்டு, போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளில் விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். விவசாயிகளின் போராட்டம் இன்று 82வது நாளாக நீடிக்கிறது. 

எல்லை பகுதிகளை  ஆக்கிரமித்து, ஆயிரக்கணக்கான வாகனங்களுடன் விவசாயிகள் போராடி வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக சிங்கு, காசிப்பூர் மற்றும் திக்ரி எல்லைகளில் நடைபெறும் போராட்டம் காரணமாக உத்தர பிரதேசம், டெல்லி, அரியானா மாநிலங்களிடையிலான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனை சரி செய்யும் பொருட்டு  போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்களை செய்தது டெல்லி காவல் துறையின் போக்குவரத்து பிரிவு. 

இந்நிலையில் இன்று நொய்டாவிலிருந்து டெல்லிக்கு வரும் முக்கியமான பகுதியான கேரேஜ் வே பாதையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருவதால் அந்த பாதை மூடப்பட்டுள்ளது. அதேசமயம் டெல்லியிலிருந்து நொய்டா செல்லும் கேரேஜ் வே வழக்கம் போல செயல்படுகிறது.

காசிப்பூர் எல்லை மூடப்பட்டுள்ளது. இதனால், உத்தரபிரதேசத்திலிருந்து டெல்லிக்கு வரும் வாகன ஓட்டிகள் அந்த பாதையில் வர முடியாது. பயணிகள் டி.என்.டி., கர்காரி மோட் மற்றும் ஷஹாத்ரா வழியாக காசியாபாத் செல்லும்படி போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

டெல்லி-அரியானா இடையிலான போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சிங்கு, திக்ரி, ஆச்சண்டி, பியாவ் மணியாரி மற்றும் சபோலி மற்றும் மங்கேஷ் வழியாக செல்லும் நுழைவு சாலை மற்றும் வெளியேறும் சாலைகள் மூடப்பட்டுள்ளன. லம்பூர் சஃபியாபாத், பல்லா மற்றும் சிங்கு பள்ளி சுங்க வரி எல்லை வழியாக மாற்றுப்பாதைகளை பயன்படுத்துமாறு பயணிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். 

முகர்பா மற்றும் ஜி.டி.கே சாலையில் இருந்து போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது. பயணிகள் வெளி வட்ட சாலை, ஜி.டி.கே. சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலை-44 ஆகியவற்றை தவிர்க்குமாறு போக்குவரத்து போலீசார் கூறி உள்ளனர். மற்ற எல்லை பாதைகளான டெல்லி-குர்கான் மற்றும் டெல்லி-ஃபரிதாபாத் சாலைகளை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News