ஆன்மிகம்
அன்னாபிஷேகம்

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம்

Published On 2020-11-01 06:37 GMT   |   Update On 2020-11-01 06:37 GMT
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் சிவலிங்கத்துக்கு அன்னாபிஷேகம் செய்து தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இந்த சிவலிங்கத்துக்கு தினமும் 6 கால அபிஷேக ஆராதனைகளும் மணக்கோலத்தில் பின்புறம் உள்ள சிவபெருமானுக்கும் பார்வதிக்கும் ஆண்டுக்கு ஒருமுறை அபிஷேக ஆராதனை நடைபெற்று சந்தனகாப்பு அலங்காரம் நடைபெறும். இந்த சந்தனகாப்பு அலங்காரம் அடுத்த ஆண்டுதான் களையப்பட்டு மீண்டும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஐப்பசி மாதம் பவுர்ணமிக்கு அடுத்த பரணி நட்சத்திரத்தில் சிவலிங்கத்துக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, சாதம் வடித்து சிவலிங்கம் முழுவதும் அந்த சாதத்தால் அலங்காரம் செய்து அன்னாபிஷேகம் நடைபெறும். அதன் பிறகு கோவில் கதவு திறக்கப்பட்டு, பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள்.

நேற்று வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் சிவலிங்கத்துக்கு அன்னாபிஷேகம் செய்து தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மாலை சாயரட்சை காலத்தில் சிவலிங்கத்தின் மேல் சாத்தப்பட்ட அன்னம் களையப்பட்டு அதில் ஒரு பகுதியை எடுத்து மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்து சென்று கோவிலுக்கு எதிரே உள்ள சன்னதிக்கடல் என்னும் வேதநதியில் கரைத்தனர். பின்பு சாயரட்சை தீபாராதனை முடிந்து பக்தர்களுக்கு சிவலிங்கத்தின் மேல் சாத்தப்பட்ட அன்னம்(சோறு) பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த ஐதீகப்படி அன்னம் (சோறு) கரைய மழை பெய்யும் என்பது ஐதீகம்.
Tags:    

Similar News