செய்திகள்
கோப்பு படம்.

9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் ஏட்டுக்கு 5 ஆண்டு சிறை

Published On 2021-04-16 20:05 GMT   |   Update On 2021-04-16 20:05 GMT
ஓடும் ரெயிலில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் ஏட்டுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஈரோடு மகிளா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
ஈரோடு:

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் மாவட்டத்தை சேர்ந்த தம்பதியினர் தங்களது 9 வயது சிறுமியுடன் ஊட்டிக்கு கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் சுற்றுலா வந்தனர்.

சென்னையில் இருந்து ரெயிலில் வந்த போது, அதே பெட்டியில் திருப்பூர் மாவட்டம், ஊதியூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்த தாராபுரத்தை சேர்ந்த ஜெகன் (வயது 39) என்பவரும் பயணம் செய்தார்.

இந்த ரெயில் ஈரோடு அருகே வந்தபோது, 9 வயது சிறுமிக்கு போலீஸ்காரர் ஜெகன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். தூங்கிக்கொண்டு இருந்த பெற்றோர் சிறுமியின் சத்தம் கேட்டு எழுந்தனர்.

பின்னர் சிறுமியிடம் பெற்றோர் விசாரித்த போது, போலீஸ்காரர் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் இது குறித்து ஈரோடு ரெயில்வே போலீசில் புகார் செய்தனர்.

அதன்பேரில் ஈரோடு ரெயில்வே போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீஸ்காரர் ஜெகனை கைது செய்தனர்.

இந்த வழக்கு ஈரோடு மகிளா விரைவு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் வழக்கின் விசாரணை முடிந்து நேற்று நீதிபதி மாலதி தீர்ப்பு கூறினார். அவர் தனது தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட போலீஸ் ஏட்டு ஜெகனுக்கு போக்சோ சட்டப்பிரிவின் கீழ் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தார்.

அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.50 ஆயிரம் தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி மாலதி தனது தீர்ப்பில் கூறி உள்ளார்.
Tags:    

Similar News