செய்திகள்
மூதாட்டிகளை குறித்து நூதன திருட்டில் ஈடுபட்டு கைதான பெண்களை காணலாம்

ஷேர் ஆட்டோவில் மூதாட்டிகளை குறி வைத்து நகை திருடிய 7 பெண்கள் கைது

Published On 2020-10-21 01:45 GMT   |   Update On 2020-10-21 01:45 GMT
மூதாட்டிகளை குறி வைத்து அவர்களுடன் ஷேர் ஆட்டோவில் பயணம் செய்து நூதன முறையில் நகை, பணம் திருடிய 7 பெண்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 25 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.
பெரம்பூர்:

வடசென்னை பகுதிகளில் மூதாட்டிகளை குறி வைத்து நூதன முறையில் பணம், நகைகள் திருடும் கும்பல் சுற்றி திரிவதாக புகார்கள் வந்தன. அவர்களை பிடிக்க சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டார்.

இதனையடுத்து கூடுதல் கமிஷனர் அருண் ஆலோசனையின்பேரில் வடக்கு மண்டல இணை கமிஷனர் பாலகிருஷ்ணன், வண்ணாரப்பேட்டை உதவி கமிஷனர் ஜூலியஸ் சீசர், திருவொற்றியூர் உதவி கமிஷனர் ஆனந்தகுமார் மற்றும் திருவொற்றியூர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, பழைய வண்ணாரப்பேட்டை, புதுவண்ணாரப்பேட்டை உள்பட வடசென்னையில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது புதுவண்ணாரப்பேட்டை டோல்கேட் அருகே சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த 4 பெண்களை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த திலகா (வயது 28), ராணி (38), மரியா (27), ராஜம்மாள் (40) என்பது தெரிந்தது.

இவர்கள், ஆயுதபூஜை, தீபாவளி வருவதால் சென்னையில் உள்ள நகை, ஜவுளிகடைகளில் கூட்டம் அதிகமாக வரும் என்பதால் அதை பயன்படுத்தி திருட்டில் ஈடுபடும் நோக்கில் சென்னை வந்து வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளனர்.

மேலும் இவர்கள், சென்னையின் பல்வேறு பகுதிகளில் கோவில், வங்கி, பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் கும்பலாக நின்று மூதாட்டிகளை குறி வைத்து நூதன திருட்டிலும் ஈடுபட்டு வந்தனர். குறிப்பாக ஷேர் ஆட்டோவில் செல்லும் மூதாட்டிகளிடம் நைசாக பேசி அவர்கள் செல்ல வேண்டிய இடத்துக்குத்தான் தாங்களும் செல்வதாக கூறி ஆட்டோவில் பயணம் செய்வார்கள். சிறிது நேரத்தில் மூதாட்டியின் கவனத்தை திசை திருப்பி அவர்களிடம் இருக்கும் நகை, பணத்தை நைசாக திருடுவார்கள்.

இவர்களின் மற்றொரு கும்பல் தனியாக செல்லும் மூதாட்டிகளிடம், அந்த பகுதியில் திருட்டு பயம் இருப்பதாக கூறி, மூதாட்டியின் கழுத்தில் கிடக்கும் நகைகளை வாங்கி, அதை பையில் வைத்து கொடுத்து உதவுவதுபோல் நடித்து நைசாக திருடிச்சென்றுவிடுவார்கள்.

இவ்வாறு திருவொற்றியூர், ஆர்.கே.நகர், எழும்பூர், பூக்கடை, வில்லிவாக்கம், எஸ்பிளனேடு உள்பட 15-க்கும் மேற்பட்ட இடங்களில் கைவரிசை காட்டி உள்ளனர். இதையடுத்து அவர்கள் 4 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

மேலும் இவர்கள் அளித்த தகவலின்பேரில் கொருக்குப்பேட்டை பெரியார் நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்த இவர்களின் கூட்டாளிகளான உஷா (34), லட்சுமி (40), இசக்கியம்மாள் (27) ஆகிய மேலும் 3 பெண்களையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

கைதான 7 பெண்களிடம் இருந்தும் 25 பவுன் நகைகள், ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் 7 பேரையும் சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News