கிச்சன் கில்லாடிகள்
வாழைப்பழ பர்ஃபி

நாவில் கரையும் வாழைப்பழ பர்ஃபி

Published On 2022-02-21 09:22 GMT   |   Update On 2022-02-21 09:22 GMT
பஞ்சாப் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டது ‘பர்ஃபி’. நாவில் கரையும் வித்தியாசமான சுவை கொண்ட ‘வாழைப்பழ பர்ஃபி’ எவ்வாறு செய்யலாம் என்பதை இங்கு காண்போம்.
பஞ்சாப் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டது ‘பர்ஃபி’. அதன்  சுவையின் காரணமாக இந்தியர்கள் மட்டுமின்றி, வெளிநாட்டினரும் ‘பர்ஃபி’யை விரும்பிச் சாப்பிடுகின்றனர். அந்த வகையில், நாவில் கரையும் வித்தியாசமான சுவை கொண்ட ‘வாழைப்பழ பர்ஃபி’ எவ்வாறு செய்யலாம் என்பதை இங்கு காண்போம்.

தேவையான பொருட்கள்:

நன்றாக பழுத்த வாழைப்பழம் - 3
வெல்லம் -  100 கிராம்
நெய் - 8 தேக்கரண்டி
கோதுமை மாவு - 150 கிராம்
ஏலக்காய்த் தூள் - 2 தேக்கரண்டி
பொடித்த பாதாம் - தேவையான அளவு

செய்முறை:

தோல் நீக்கிய வாழைப்பழத்தை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்துக்கொள்ளவும். அடிப்பக்கம் கனமான பாத்திரத்தில், வெல்லத்தைப் போட்டு அது கரையும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.

பின்பு வேறொரு பாத்திரத்தில் 6 தேக்கரண்டி நெய் ஊற்றி சூடுபடுத்தவும். அதில் கோதுமை மாவு சேர்த்து 5 நிமிடங்கள் நன்றாகக் கிளறவும். பின்பு அரைத்து வைத்திருக்கும் வாழைப்பழக் கலவையை அதில் கொட்டி 10 நிமிடங்கள் கிளறவும்.

இப்போது அந்தக் கலவையில் வடிகட்டிய வெல்ல நீர் மற்றும் ஏலக்காய் தூளைச் சேர்த்து கெட்டியாகும் வரை கிளறவும். பின்னர் அதன் மேல் 2 தேக்கரண்டி நெய் ஊற்றிக் கலந்து இறக்கவும்.  

இந்தக் கலவையை வேறொரு பாத்திரத்துக்கு மாற்றி, பொடித்த பாதாமை அதன் மேல் தூவி, விருப்பமான வடிவத்தில் வெட்டிக்கொள்ளவும்.

இப்போது நாவில் கரையும் சுவையான ‘வாழைப்பழ பர்ஃபி’ தயார்.
Tags:    

Similar News