செய்திகள்
பாதுகாப்பு படையினர் குவிப்பு

டிரம்புக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் பலத்த பாதுகாப்பு

Published On 2021-01-13 21:06 GMT   |   Update On 2021-01-13 21:06 GMT
அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எதிரான பதவி நீக்க தீர்மானத்தில் விவாதம் நடந்து வரும் நிலையிலும், ஜோ பைடன் பதவியேற்புவிழா நடைபெற உள்ள நிலையில் நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
வாஷிங்டன்:

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடனுக்கு வெற்றி சான்றிதழ் அளிப்பதற்காக அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக்கூட்டம் கடந்த 6-ந்தேதி நடைபெற்றது.

அப்போது தேர்தலில் தோல்வியடைந்த தற்போதைய ஜனாதிபதி டிரம்பின் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் நாடாளுமன்றத்துக்குள் அத்துமீறி நுழைந்து கடும் வன்முறையில் ஈடுபட்டனர். இந்த வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 5 பேர் உயிரிழந்தனர்.

இதனிடையே ஜனாதிபதி டிரம்பின் பதவி காலம் இன்னும் சில நாட்களில் முடிய இருக்கும் நிலையில் நாடாளுமன்ற கலவரத்துக்கு பொறுப்பேற்று அவர் உடனடியாக பதவி விலக வேண்டுமென ஜனநாயக கட்சியினர் வலியுறுத்தினர்.‌

அப்படி அவர் பதவி விலகாவிட்டால் நாடாளுமன்றத்தில் அவருக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டுவந்து அவரை பதவியில் இருந்து நீக்குவோம் என ஜனநாயக கட்சியினர் திட்டவட்டமாக கூறினர்.அதன்படி துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் அமெரிக்க அரசியலமைப்பின் 25-வது சட்டத்திருத்தத்தை பயன்படுத்தி டிரம்பை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என ஜனநாயக கட்சியினர் வலியுறுத்தினர்.

இதுதொடர்பாக ஜனநாயக கட்சியினரை பெரும்பான்மையாக கொண்ட நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் நேற்று முன்தினம் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

பிரதிநிதிகள் சபையின் தலைவர் நான்சி பெலோசி இந்த தீர்மானத்தை முன்மொழிந்தார். அதனைத் தொடர்ந்து இந்த தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது.

அப்போது அவையில் பேசிய நான்சி பெலோசி ‘‘ஜனவரி 6-ந்தேதி ஜனாதிபதி டிரம்ப் அமெரிக்காவுக்கு எதிராக ஒரு கொடிய கிளர்ச்சியை தூண்டினார். அது அமெரிக்க ஜனநாயகத்தின் இதயமான நாடாளுமன்றத்தை குறிவைத்தது. இது நம் நாட்டின் வரலாற்றில் என்றென்றும் கறைபடுத்தும் கொடூரங்கள். தேசத்துரோக தாக்குதலுக்கு ஜனாதிபதி டிரம்ப் அழைப்புவிடுத்தார் என்ற உண்மைகள் மிகவும் தெளிவாக உள்ளன’’ என கூறினார்.

சில மணி நேரம் நடந்த விவாதத்துக்கு பிறகு 25-வது சட்ட திருத்தத்தை அமல்படுத்த துணை ஜனாதிபதி மைக் பென்சை வலியுறுத்தும் இந்த தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடந்தது.

இதில் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த 222 உறுப்பினர்களும், குடியரசுக் கட்சி உறுப்பினர் ஒருவரும் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். 205 வாக்குகள் தீர்மானத்துக்கு‌ எதிராக பதிவாகின. அதன்படி 18 வாக்குகள் வித்தியாசத்தில் பிரதிநிதிகள் சபையில் இந்த தீர்மானம் நிறைவேறியது.

எனினும் இந்த தீர்மானம் ‌ நிறைவேற்றப்படுவதற்கு முன்பாகவே துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் 25-வது சட்ட திருத்தத்தை பயன்படுத்தி டிரம்பை பதவி நீக்கம் செய்ய முடியாது என அறிவித்துவிட்டார்.

தீர்மானத்தின் மீது விவாதம் நடந்து கொண்டிருந்த சமயத்தில் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் பிரதிநிதிகள் சபை தலைவர் நான்சி பெலோசிக்கி கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருந்ததாவது:-

நமது அரசியலமைப்பின்படி, 25-வது சட்டத்திருத்தம் என்பது தண்டனை அளிப்பதோ அல்லது கைப்பற்றுதலோ அல்ல. ஜனாதிபதி செயல்பட முடியாமல் போகும்போதும், திறமையற்றவராக இருக்கும்போதுதான் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே அது உருவாக்கப்பட்டது. எனவே ஜனாதிபதி டிரம்புக்கு எதிராக 25-வது சட்டத்திருத்தத்தை பயன்படுத்தி அவரைப் பதவி நீக்கம் செய்வது கொடூரமான முன் உதாரணமாகிவிடும்.

ஜனாதிபதி டிரம்ப் பதவிக்காலம் முடிய இன்னும் 8 நாட்கள் இருக்கும் நிலையில் அவருக்கு எதிராக 25-வது சட்டத்திருத்தத்தை பயன்படுத்தக் கூறுகிறீர்கள். இது தேசத்துக்கும், நமது அரசியலமைப்புச் சட்டத்துக்கும் உகந்ததாக இருக்காது.இவ்வாறு மைக் பென்ஸ் கூறியிருந்தார்.

ஒருவேளை மைக் பென்ஸ் 25-வது சட்ட திருத்தத்தை செயல்படுத்த மறுக்கும் பட்சத்தில் கிளர்ச்சியை தூண்டிய குற்றச்சாட்டில் டிரம்புக்கு எதிராக பதவி நீக்க தீர்மானத்தை கொண்டுவர வேண்டுமென ஜனநாயக கட்சியினர் ஏற்கனவே முடிவு செய்திருந்தனர்.‌

அதன்படி பிரதிநிதிகள் சபையில் டிரம்புக்கு எதிராக பதவி நீக்க தீர்மானத்தை கொண்டுவந்து ஓட்டெடுப்பு நடத்துவதற்கான பணிகளை ஜனநாயக கட்சிகள் தொடங்கியுள்ளனர்.

இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், அமெரிக்க நாடாளுமன்றத்தை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாஷிங்டன் நகரின் மையப்பகுதி பாதுகாப்பு படையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது என்று சொல்லும் அளவுக்கு பாதுகாப்பு குவிக்கப்பட்டுள்ளது.

ஜோ பைடன் வரும் 20-ம் தேதி அதிபராக பதவியேற்க உள்ளதால் வன்முறை சம்பவங்கள் அரங்கேறுவதை தடுக்கும் விதமாக பாராளுமன்ற கட்டிடம் முழுவதும் தேசிய பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
Tags:    

Similar News