லைஃப்ஸ்டைல்
சூரிய நமஸ்காரம்

உடற்பயிற்சி செய்ய முடியாதவர்களுக்கு சூரிய நமஸ்காரம்

Published On 2020-06-13 04:51 GMT   |   Update On 2020-06-13 04:51 GMT
உடற்பயிற்சியோ, யோகாசனங்களோ செய்ய முடியாதவர்கள் சூரிய நமஸ்காரம் செய்து வரலாம். இது எளிய பயிற்சி முறைகளை கொண்டிருப்பதோடு ஏராளமான உடல்நல நன்மைகளுக்கும் காரணமாக அமைந்திருக்கிறது.
சூரியனை வழிபடும் முறையாக கடைப்பிடிக்கப்படும் சூரிய நமஸ்காரம் 12 யோகா போஸ்களை உள்ளடக்கியது. உடல், மனம், சுவாசம் ஆகிய மூன்றையும் ஒருங்கிணைத்து செய்யும் பயிற்சி முறையாக இது அமைந்திருக்கிறது. உடற்பயிற்சியோ, யோகாசனங்களோ செய்ய முடியாதவர்கள் சூரிய நமஸ்காரம் செய்து வரலாம். இது எளிய பயிற்சி முறைகளை கொண்டிருப்பதோடு ஏராளமான உடல்நல நன்மைகளுக்கும் காரணமாக அமைந்திருக்கிறது.

* சூரிய நமஸ்காரம் செய்வதற்கு எடை அதிகம் கொண்ட உடற்பயிற்சி சாதனங்கள் தேவையில்லை. யோகாசன அசைவுகளை சுலபமாக மேற்கொண்டு பயிற்சி பெறலாம். தொடர்ந்து சூரிய நமஸ்காரம் செய்து வந்தால் வயிற்றை சுற்றியுள்ள கொழுப்பு கரைய தொடங்கும். உடலும் கட்டுக்கோப்பான வடிவத்திற்கு மாறும்.

* தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதன் மூலம் உடலில் 400 கலோரிகளுக்கு மேல் எரிக்க செய்துவிடலாம்.

* அன்றாட உடல் இயக்கத்திற்கு ஈடு கொடுத்து சரிவர செயல்படாமல் இருக்கும் சுரப்பிகளை தூண்டுவதற்கு இந்த பயிற்சிமுறை உதவும். குறிப்பாக தைராய்டு சுரப்பிகளுக்கு ஊக்கம் அளிக்கும். மேலும் ஹார்மோன்களின் சுரப்பை அதிகரிக்கச் செய்துவிடும்.

* மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குபடுத்துவதில் சூரிய நமஸ்காரத்தின் பங்களிப்பு முக்கியமானது. மாதவிடாய் பிரச்சினையால் அவதிப்படும் பெண்கள் தவறாமல் சூரிய நமஸ்காரம் செய்து வருவது பலன் தரும். பிரசவம் சுமூகமாக நடைபெறவும் துணைபுரியும்.

* பெண்கள் சூரிய நமஸ்காரத்தை தவறாமல் செய்துவந்தால் சருமம் பளபளப்புடன் காட்சி அளிக்கும். அதற்கு காரணம் உடலில் ரத்த ஓட்டம் நன்றாக இருப்பதற்கு சூரிய நமஸ்காரம் உதவும்.

* சூரிய நமஸ்காரத்தில் மேற்கொள்ளப்படும் 23 பயிற்சி முறைகள் உடல் உறுப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்தவும் உதவும்.

* எந்த நேரத்திலும் சூரிய நமஸ்காரம் செய்யலாம். இருப்பினும் பலர் சூரிய உதயத்தின்போது செய்வதற்கு விரும்புகிறார்கள். அதுதான் சிறப்பானது. மற்ற வேளைகளில் மேற்கொள்வதாக இருந்தால் சாப்பிட்ட பிறகு இரண்டு மணி நேரம் கழித்து செய்ய வேண்டும்.

* சூரிய நமஸ்கார பயிற்சியை பத்து நிமிடத்திற்குள் செய்து முடித்துவிடலாம். எனினும் பயிற்சிக்கான நேரத்தை நிர்ணயிப்பது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட விருப்பத்தை பொறுத்தது. சிலர் உடல் நெகிழ்வுதன்மை பெறுவதற்காக மெதுவாக பயிற்சிகளை மேற்கொள்வார்கள். சிலர் உடல் எடையை குறைப்பதற்காக வேகவேகமாக செய்து முடிப்பார்கள்.

* சூரிய நமஸ்காரத்தில் மேற்கொள்ளப்படும் உடல் அசைவுகள் அனைத்தும் வார்ம் அப், ஆசனங்கள் போன்றவற்றின் கலவையாகும். “இது ஒரு முழுமையான உடற்பயிற்சி. முதுகு தசைகளை பலப்படுத்தும். ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கும். இந்த பயிற்சிகள் அனைத்தும் வளர்சிதை மாற்றம் மற்றும் ரத்த ஓட்ட அளவை மேம்படுத்துவதற்கும், மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குபடுத்துவதற்கும் உதவுகின்றன” என்கிறார், உடற்பயிற்சியாளர் பிரியங்கா மேத்தா.

* சூரிய நமஸ்காரம் பயிற்சியை திறந்தவெளியிலோ, தனி அறையிலோ மேற்கொள்ளலாம். நான்கு சதுர மீட்டர் இடமும், அதே அளவுக்கு துணியோ, போர்வையோ போதுமானது. ஆரம்பத்தில் உடற்பயிற்சியாளர்களிடம் பயிற்சி பெற்றுவிட்டு பின்பு தனியாக செய்து பழகிவிடலாம். முதுகு, இடுப்பு எலும்பு பிரச்சினை இருப்பவர்கள், கர்ப்பிணிகள் தவிர்ப்பது நல்லது.
Tags:    

Similar News