செய்திகள்
கொந்தகையில் முழுதாக கிடைத்த தாழியையும், அதன் உள்ளே கிடந்த மண்டை ஓடு, எலும்புகள்

மண்டை ஓடு, எலும்புகளுடன் முழு வடிவமாக கிடைத்த தாழி- மரபணு சோதனைக்கு அனுப்ப முடிவு

Published On 2021-04-24 04:00 GMT   |   Update On 2021-04-24 04:00 GMT
கீழடி அருகே கொந்தகையில் நடந்த அகழாய்வில் மனித மண்டை ஓடு, எலும்புகளுடன் முழு வடிவமாக முதுமக்கள் தாழி கிடைத்துள்ளது. அதை மரபணு சோதனைக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்புவனம்:

நாகரிகத்தில் தமிழர்கள் தான் முன்னோடி என உலகிற்கு பறை சாற்றிவரும் சிவகங்கை மாவட்டம் கீழடியில் தற்போது 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி நடைபெற்று வருகிறது. இதற்காக கீழடியில் 3 இடங்களில் குழிகள் தோண்டப்பட்டு ஆய்வு நடைபெறுகிறது. இதே போல் கீழடி அருகே உள்ள கொந்தகை, அகரம் கிராமங்களிலும் அகழாய்வு நடந்து வருகிறது.

இதில் கொந்தகையில் 3 குழிகள் தோண்டப்பட்டு, 10-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த தாழிகளை ஆய்வு செய்யும் பணி நேற்று தொடங்கியது. முதலில் வாய்ப்பகுதி மூடிய நிலையில் கிடைத்த முழுமையான முதுமக்கள் தாழியின் மேற்பரப்பில் காணப்படும் மண்ணை அப்புறப்படுத்தி, அதன் பின்னர் அதில் உள்ள பொருட்கள் குறித்து ஆய்வு செய்தனர்.

இந்தப் பணியில் தொல்லியல் துறையினரும், மதுரை காமராஜர் பல்கலைக்கழக மரபியல் துறை பேராசிரியர் குமரேசன் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டனர். அப்போது முதுமக்கள் தாழியிலிருந்த மனித மண்டை ஓடு, பெரிய எலும்புகள், மூட்டு எலும்புகள், கை-கால்களின் எலும்புகள் மற்றும் சிறிய எலும்புகள் எடுக்கப்பட்டு, தனித்தனியாக பைகளில் இட்டு வைத்தனர்.

இவை அனைத்தையும் மரபணு சோதனைக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், அதன் பின்னரே அந்த எலும்புகள் எந்த நூற்றாண்டு காலத்தில் வாழ்ந்தவருடையது என்ற விவரம் தெரிய வரும் என ஆராய்ச்சியாளர்கள் கூறினார்கள். அந்த தாழியில் ஒருபழங்கால வாளும், 2 கூம்பு வடிவ மண்கிண்ணமும் இருந்தது. வாளும் கிடந்ததால் இறந்தவர் போர் வீரனாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த தாழியை தொல்லியல் துறை மாநில துணை இயக்குனர் சிவானந்தமும் பார்வையிட்டார்.
Tags:    

Similar News