செய்திகள்
மம்தா பானர்ஜி

தேசிய குடிமக்கள் பதிவேட்டை எதிர்த்து மம்தா தலைமையில் நவ. 11ம் தேதி போராட்டம்

Published On 2019-11-07 13:42 GMT   |   Update On 2019-11-07 13:42 GMT
தேசிய குடிமக்கள் பதிவேடு அமைப்பை எதிர்த்து மேற்கு வங்காளத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் வரும் 11ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.







கொல்கத்தா:

அசாம் மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேறிய வங்காள தேசத்தவர்களை கண்டறியும் வகையில் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) தயாரிக்கப்பட்டது. இதன் இறுதி வரைவு பட்டியல் கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. இதில் 40 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் பெயர்கள் விடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து வரைவு பட்டியலில் விடுபட்டவர்கள், பெயர்களை சேர்ப்பதற்காக கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

அதன்பின், கடந்த ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், 3.11 கோடி பேரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. 19 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டிருந்தன. இதனால் மீண்டும் சர்ச்சை எழுந்தது.  தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பெயர் விடுபட்டவர்கள், தங்கள் இந்திய குடியுரிமையை நிரூபிக்க, உரிய ஆவணங்களுடன் வெளிநாட்டு தீர்ப்பாயத்தில் முறையிடலாம் என தெரிவிக்கப்பட்டது.

மத்திய அரசின் இந்த என்.ஆர்.சி. அமைப்பிற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து மேற்கு வங்காள மாநிலத்திலும் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அரசு அலுவலகங்களிலிருந்து ஆவணங்களை பெரும் முயற்சியில் 6 பேர் உயிரிழந்தனர்.

இதற்கு மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்தார். அவர் மேற்கு வங்காள மாநிலத்தில் இந்த அமைப்பு செயல்பட விடமாட்டேன் எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில், தேசிய குடிமக்கள் பதிவேடு அமைப்பிற்கு எதிராக நவம்பர் 11-ம் தேதி திரிணாமூல் காங்கிரஸ் கட்சி சார்பாக போராட்டம் நடத்த போவதாக மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

Tags:    

Similar News