செய்திகள்
பாலியல் வன்கொடுமை

தொடரும் அநீதி...ஓடும் ரெயிலில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை

Published On 2021-10-11 11:39 GMT   |   Update On 2021-10-11 11:39 GMT
லக்னோவில் இருந்து மும்பை சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் கொள்ளையர்களால் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மும்பை:

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து மராட்டியத்தின் மும்பை நோக்கி கடந்த 8-ம் தேதி இரவு லக்னோ-மும்பை புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. மராட்டியத்தின் லகட்புரி நகரில் உள்ள நிலையத்திற்கு ரெயில் வந்தபோது அதில் பயங்கர ஆயுதங்களுடன் 8 கொள்ளையர்கள் ஏறினர். படுக்கை பெட்டியில் (சிலிப்பர் கோட்ச்) ஏறிய கொள்ளையர்கள் பயணிகளிடம் கூர்மையான ஆயுதங்களை காட்டி மிரட்டி நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்தனர்.

மேலும், 20 வயது நிரம்பிய பெண் பயணி ஒருவரை அவரது கணவர் மற்றும் சக பயணிகள் முன் ஒடும் ரெயிலில் கொள்ளையர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். இதை தடுக்க முயன்ற இளம்பெண்ணின் கணவர் மற்றும் சக பயணிகளை கொள்ளையர்கள் கூர்மையான ஆயுதங்களால் தாக்கினர்.

ரெயில் மும்பையின் கசரா ரெயில் நிலையம் வந்ததும் பயணிகள் கூச்சலில் ஈடுபட்டனர். இதையடுத்து, அங்கு பணியில் இருந்த ரெயில்வே போலீசார் கொள்ளையர்களில் 4 பேரை கைது செய்தனர். ஆனால், எஞ்சிய 4 கொள்ளையர்கள் தப்பிச்சென்றனர். இதனை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த ரெயில்வே போலீசார் தப்பியோடிய கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர்.  

இந்நிலையில், ஓடும் ரெயிலில் இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிய எஞ்சிய 4 கொள்ளையர்களையும் ரெயில்வே போலீசார் கைது செய்துள்ளனர். இதனால்,எக்ஸ்பிரஸ் ரெயிலில் கொள்ளை மற்றும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட 8 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்டுள்ள 8 பேரில் 4 பேர் குற்றப்பிண்ணனி கொண்டவர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட 8 பேரும் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட அனைவரும் 18 முதல் 25 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் என தெரியவந்துள்ளது. 
Tags:    

Similar News