ஆன்மிகம்

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் திருவிழா

Published On 2019-06-19 04:45 GMT   |   Update On 2019-06-19 04:45 GMT
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், பால்குடம், அக்னிச்சட்டி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
சோழவந்தானில் பிரசித்தி பெற்ற ெஜனகை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி திருவிழா விமரிசையாக கொண்டாடப்படும். இதில் தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் கலந்துகொள்வார்கள். இந்தநிலையில் இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக நேற்று அக்னிச்சட்டி எடுத்து வருதல், பால்குட ஊர்வலம் உள்ளிட்டவை நடைபெற்றது. முன்னதாக பக்தர்கள் வைகை ஆற்றுக்கு சென்று பூஜைகள் செய்து பால்குடம் எடுத்து நான்கு ரத வீதி வழியாக கோவிலை வந்தடைந்தனர். அதன்பிறகு கோவிலில் அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. அர்ச்சகர் சண்முகவேல் பூஜைகள் செய்தார். இந்த பால்குட ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் அக்னிச்சட்டி எடுத்தும், அலகு குத்தியும், சிறிய தேர் இழுத்து வந்தும், சாமி உருவ பொம்மைகள், கால்நடை பொம்மைகள், ஆயிரங்கண் பானை எடுத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் குழந்தை வரம் கேட்டு வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் குழந்தைகளை கரும்பு தொட்டிலில் கட்டி எடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து அம்மன் வைகை ஆற்றுக்கு சென்று அங்கு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அம்மன் இரவு பூப்பல்லக்கில் மின் அலங்காரத்தில் வைகை ஆற்றில் இருந்து புறப்பாடாகி நான்கு ரத வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தார்.

முன்னதாக திருவிழாவையொட்டி பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் குடிநீர் வசதி, தெருவிளக்குகள், சுகாதார வசதி, கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டிருந்தது. மேலும் திருவிழாவிற்கு வந்திருந்த பக்தர்களுக்காக வைகை ஆற்றில் முத்து முருகா அறக்கட்டளை சார்பிலும், விவசாயிகள் சார்பிலும் தண்ணீர் வசதி செய்யப்பட்டிருந்தது. மேலும் வெளியூர் பக்தர்களுக்காக அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் பஸ் வசதி செய்யப்பட்டிருந்தது.

திருவிழா ஏற்பாடுகளை கோவில் உபயதாரர்கள் மற்றும் தக்கார் மாரியப்பன், செயல் அலுவலர் சுசீலா ராணி, ஆலயப் பணியாளர்கள் பூபதி முருகன், வசந்த், சுபாஷினி, மருதுபாண்டி ஆகியோர் செய்திருந்தனர்.

பாதுகாப்பு பணியில் சமயநல்லூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன் குமார், சோழவந்தான் இன்ஸ்பெக்டர் ராஜா ஆகியோர் தலைமையில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். இதுதவிர விவேகானந்தா கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் தேசிய மாணவர் படை மாணவர்கள் சேவை செய்தனர்.

திருவிழாவில் இன்று(புதன்கிழமை) மாலை பக்தர்கள் பூக்குழி இறங்கும் விழா நடைபெறுகிறது.
Tags:    

Similar News