செய்திகள்
பணம்

கிசான் திட்டத்தில் ரூ.90 லட்சம் முறைகேடு- விசாரணை நடத்த அதிகாரிகள் தயக்கம்

Published On 2020-09-16 08:31 GMT   |   Update On 2020-09-16 08:31 GMT
விருதுநகர் மாவட்டத்தில் மோசடி செய்தவர்களின் விவரங்கள் கிடைத்து விட்ட நிலையில் அவர்கள் மீது விசாரணை நடத்த அதிகாரிகள் தயக்கம் காட்டி வருவது விவசாயிகளிடம் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர்:

பிரதமரின் விவசாயிகளுக்கான கிசான் திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் தமிழகத்தில் நடந்து இருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதுதொடர்பாக புகார்கள் பெறப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

விருதுநகர் மாவட்டத்தில் கிசான் திட்டத்தில் 2 ஆயிரத்து 622 பேர் முறைகேடு செய்த தாக விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து அதிகாரிகளிடம் விசாரித்தபோது, விருதுநகர் மாவட்டத்தில் 786 பேர் முறைகேடாக பதிவு செய்து பணம் பெற்றிருப்பதாக தெரிவித்தனர்.

மேலும் இந்த மாவட்டத்தை சேர்ந்த 1786 பேர் வெளிமாவட்டங்களில் பதிவு செய்து இங்கு பணம் பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் மொத்தமாக ரூ.90 லட்சம் முறைகேடு நடந்துள்ளது.

மோசடி செய்தவர்கள் குறித்து இதுவரை புகார் எதுவும் செய்யப்பட வில்லை.

இதுகுறித்து விவசாய துறை இணை இயக்குநர் உத்தண்டராமனிடம் கேட்டபோது, மோசடி பணத்தில் ரூ.30 லட்சம் திரும்ப பெறப்பட்டுள்ளது. மொத்தமாக நடந்த மோசடி என்றால் புகார் தெரிவித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் அங்கொன்றும், இங்கொன்றுமாக 2, 3 பேர் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். எனவே புகார் கொடுப்பதில் சிக்கல் உள்ளது என்றார்.

கிசான் திட்டத்தில் விவசாயிகள் அல்லாதோர் முறைகேடாக பதிவு செய்து பணம் பெற்றிருப்பது ஏற்கனவே உண்மை விவசாயிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விவகாரத்தில் முறையான ஆவணங்கள் இல்லாமல் ஒரு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் வேறு மாவட்டத்தில் பதிவு செய்து பணம் பெற்றது எப்படி? இதற்கு உடந்தையாக இருந்தவர்கள் யார்? என்பது மர்மமாக உள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் மோசடி செய்தவர்களின் விவரங்கள் கிடைத்து விட்ட நிலையில் அவர்கள் மீது விசாரணை நடத்தவும், புகார் கொடுக்கவும் தாமதம் காட்டுவது ஏன்? என்பது தெரியவில்லை. மேலும் இந்த விசயத்தில் இடைத்தரகர்களாக செயல்பட்டவர்கள், உடந்தையாக இருந்த அதிகாரிகள் ஆகியோர் குறித்தும் விசாரணை நடத்த அதிகாரிகள் தயக்கம் காட்டி வருவது விவசாயிகளிடம் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News