செய்திகள்
கோப்பு படம்

கோவை மார்க்கெட்டுகளில் பொங்கல் பொருட்கள் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்

Published On 2020-01-14 11:03 GMT   |   Update On 2020-01-14 11:03 GMT
பொங்கல் பண்டிகை நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில் கோவையில் உள்ள மார்க்கெட்டுகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது.
கோவை:

உழவர் திருநாளான பொங்கல் பண்டிகை நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகை கொண்டாட தேவையான பொருட்களான மண்பானைகள், பூளைப்பூ, மஞ்சள் கொத்து, கரும்பு உள்ளிட்டவை வாங்க கோவையில் உள்ள மார்க்கெட்டுகளில் பொதுமக்களின் கூட்டம் இன்று காலை முதல் அலைமோதியது.

கோவைக்கு கரும்புகள் ஈரோடு, சேலம், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் முதல் 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் கரும்புகள் கொண்டு வரப்பட்டது.

மொத்த விலையில் 15 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ. 450 முதல் ரூ. 500 வரை விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விலையில் ஒரு ஜோடி கரும்பு ரூ. 100-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதே போல மஞ்சள் கொத்து ரூ. 20 முதல் ரூ. 50 வரையிலும், பூளைப்பூ ரூ. 10-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதே போல பொங்கல் காய்கறிகளான மொச்சை, அரசாணிக்காய், பூசணி, சர்க்கரை கிழங்கு உள்ளிட்ட காய்கறிகளின் விற்பனையும் அதிகரித்துள்ளது.

கோவை மார்க்கெட்டுக்கு நிலக்கோட்டை, கள்ளிப்பாளையம், சத்திய மங்கலம், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மல்லிகை, முல்லை பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.ஆலாந்துறை, காரமடை, பொள்ளாச்சி, உடுமலை, சேலம், தர்மபுரி ஆகிய பகுதிகளில் இருந்து செவ்வந்தி, செண்டுமல்லி, ஆகியவை கொண்டு வரப்படுகிறது. தேவகோட்டை, திண்டுக்கல், உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சம்பங்கி, அரளி பூக்கள் கொண்டு வரப்படுகிறது. பெங்களூர், ஓசூர் ஆகிய பகுதிகளில் இருந்து ரோஜா பூக்கள் கொண்டு வரப்படுகிறது.

பனிப்பொழிவு காரணமாக மல்லிகை, முல்லை பூக்களின் வரத்து குறைந்துள்ளது. இதனால் விலை அதிகரித்து காணப்படுகிறது.

தற்போது கோவை மார்க்கெட்டில் மல்லிகை பூ 1 கிலோ ரூ. 3 ஆயிரத்துக்கும், முல்லை பூ ரூ.2 ஆயிரத்துக்கும், ஜாதி மல்லி ரூ.1,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. செவ்வந்தி ரூ. 100, செண்டுமல்லி ரூ. 30, துளசி ரூ. 30, சம்பங்கி ரூ. 100, அரளி ரூ. 160, கோழிக்கொண்டை ரூ. 80 ஆகிய விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது.
Tags:    

Similar News