லைஃப்ஸ்டைல்
யோகா

மனதை வசப்படுத்தும் எண்வகை யோகங்கள்

Published On 2021-04-24 02:19 GMT   |   Update On 2021-04-24 02:19 GMT
யோகாவை உடற்பயிற்சி சார்ந்தது என்றும், ஆன்மிகப் பாதையில் செல்வதற்கான வழி என்றும் சிலர் சொல்கிறார்கள். ஆனால் யோகத்தின் முக்கிய நோக்கம் மனிதனை விழிப்புணர்வுடன் இருக்க செய்வதுதான்
உடல் நலத்தோடு மன நலத்தையும் காக்கவேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது. எண்ணத்தில், உணர்வில், நடத்தையில் மாற்றங்கள் ஏற்படும்போது அது மனநலத்தையும் பாதிக்கும். மனநலம் பாதிக்கப்படும்போது ரத்த அழுத்தம் அதிகரிக்கும், மூச்சுவிடுவதில் சிரமம் இருக்கும், செரிமான மண்டலத்தின் பணிகள் குறையும். இதயத்துடிப்பு அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாடுகள் குறையும். தசைகளில் அழுத்தம் ஏற்படும். தூக்கம் தடைபடும்.

‘ஒருவர் மனநலம், உடல் நலம் மற்றும் சமூக நலம் ஆகியவற்றை ஒரு சேரப் பெற்றிருந்தால் மட்டுமே, அவரை ஆரோக்கியமானவர் என குறிப்பிட முடியும்' என ஆரோக்கியத்திற்கான விளக்கத்தை அளிக்கிறது, உலக சுகாதார நிறுவனம். இது நமது சித்தர்களின் சிந்தனையில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே உதித்த கருத்துதான். சித்தர்கள், மன நலத்தை மேம் படுத்த எண்வகை யோகங்களை நமக்கு வடிவமைத்து கொடுத்துள்ளனர்.

மனித உடலும், மனமும் உறுதியாகவும், அழகாகவும், ஆரோக்கியமாகவும் பன்னெடுங்காலம் நிலைத்திருக்க அவர்கள் நமக்களித்த அரும்பெரும் பொக்கிஷங்கள்தான் மருத்துவமும், யோகக்கலைகளும். எந்த ஒரு செயலையும் உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றும் ஒருங்கிணைந்து செய்ய வேண்டும் என கற்றுக் கொடுப்பதே, யோகம்.

"இயமம் நியமம் எண்ணிலா ஆதனம்

நயமுறு பிராணாயா மம்பிரத்தி யாகாரஞ்

சயமிகு தாரணை தியானஞ் சமாதி

அயமுறும் அட்டாங்க மாவது மாமே.".. என் கிறது, திருமூலரின் பாடல்.

இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என எண்வகை யோகங்களைப்பற்றி திருமூலரின் பாடல்கள் மூலம் நாம் தெரிந்துகொள்ளலாம்.

எட்டு அங்கங்களைக் கொண்ட இந்த பயிற்சியில் ஒன்று ஆசனம். இன்னொன்று பிராணாயாமம். இவை இரண்டும்தான் இன்று யோகா என்ற பெயரில் அதிகம் கற்பிக்கப்பட்டு பயிற்சிமுறையாக்கப்பட்டிருக்கிறது.

யோகாவை உடற்பயிற்சி சார்ந்தது என்றும், ஆன்மிகப் பாதையில் செல்வதற்கான வழி என்றும் சிலர் சொல்கிறார்கள். ஆனால் யோகத்தின் முக்கிய நோக்கம் மனிதனை விழிப்புணர்வுடன் இருக்க செய்வதுதான். இது அறியாமையை களையச்செய்வது.

நம் எண்ணங்கள்தான் செயல் களாக மாற்றமடைகிறது. நம் எண்ணங்களும், செயல்களும் யாருக்கும் தீங்கு விளைவிக்காத வண்ணம் சிறப்பாக இருப்பதற்கும், ஒரு வேலையை செய்யும்போது கவனம் சிதறாமல் மனம் ஒருநிலைப்படுவதற்கும் செய்யும் பயிற்சி கள்தான், எண்வகை யோகங்கள்.

சிறு வயது முதலே யோகாவை பழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். இது சில விதிமுறைகளையும், கொள்கைகளையும் கற்றுக்கொடுக்கிறது. யோகா ஒரு வாழ்க்கை முறை, ஒருவகை வாழ்க்கைத் தத்துவம். யோக முறையை பின்பற்றும் போது உடல ளவிலும், மனதளவிலும் நற்பலன்கள் உண்டாகும்.

‘நோய் மனம் சார்ந்து வருவது. மனதில் உருவாகி, உடலில் வெளிப்படும்’ என்று, இன்று அறிவியல் ஆய்வுகள் ஒப்புக் கொள்கின்றன. நல்லதை நினைத்து, நல்ல செயல்களைச் செய்து, நல்லவராக இருந்தால் நல்லதே நடக்கும். எனவே நற்சிந்தனை, நற்செயல், நல்லெண்ணம் கொண்டு வாழவேண்டும். நற்சிந்தனையும், நற்செயலுமே இயமம், நியமம் எனப்படுகிறது. இயமமும், நியமமும் மனித மனதை தவறு செய்ய தூண்டாமல் வைத்திருக்கும்.

இயமம், மனிதன் அன்றாடம் செய்ய வேண்டிய கடமைகளை பற்றி சொல்கிறது. தீய எண்ணங்கள், தீய செயல்கள் ஆகியவற்றை விலக்கி கொல்லாமை, பொய் பேசாமை, திருடாமை, இரக்கம், இயற்கையை நேசிப்பது, பொறுமை, திடம், ஒழுக்கம், மன்னிக்கும்தன்மை ஆகியவற்றை கடைப்பிடிக்கும்படி நம்மை உணர்த்துகிறது. இது மனது சார்ந்தது.

நியமம் என்பது, நாம் கடைப் பிடிக்கவேண்டிய உடல்சார்ந்த விதிமுறைகளையும் சேர்த்து சொல்கிறது. உடல் சுத்தம், போதுமான உறக்கம், அளவான சாப்பாடு போன்ற பலவிஷயங்களை சொல்கிறது. சுருங்கச் சொன்னால் அனைத்து இயற்கை வழி களையும் வாழ்வில் கடைப்பிடித்தொழுகி, இயற்கையோடு இணைந்து வாழ்வதே நியமம் எனக் கொள்ளலாம்.

ஆசனம் என்பது, உடலைப் பண்படுத்தும் பயிற்சிகள். ஆசனங்கள் வழக்கமான உடற்பயிற்சியிலிருந்து பெருமளவு மாறுபடுகின்றன. உட்கார்ந்த நிலை ஆசனங்கள், படுத்த நிலை ஆசனங்கள், நின்ற நிலை ஆசனங்கள், முன் வளைவு ஆசனங்கள், பின் வளைவு ஆசனங்கள் என பல வகையான ஆசனங்கள் உள்ளன.

யோகாசனங்களை உடலை பல கோணங்களில் வளைத்து செய்வதால் உடலின் பல பகுதிகளில் இருக்கும் கொழுப்புகள், ஊளைதசை கரைந்து உடல் அழகான வடிவம் பெறுகிறது. உடலுக்கு தேவையான இயக்கத்தை கொடுப்பதால் ரத்த ஓட்டம் சீரடைகிறது. யோகாசனம் உடலை சரியான நிலையில் வைக்கவும், தசைகளை இலகுவாக்கு வதற்கும் தேவைப்படுகிறது. மூச்சு உடல் இயக்கத்துடன் ஒத்திசைந்து ஒருங்கிணைந்து செயல்படுவதால், இதயம் மற்றும் நுரையீரல் நன்கு செயல்படுகிறது.

ஆழ்ந்து சுவாசிப்பதால், உடலில் பிராணவாயுவின் சுழற்சியை அதிகப்படுத்தி, புத்துணர்ச்சியோடு தருகிறது. சுரப்பிகளின் தலைவனான பிட்யூட்டரி சுரப்பி மீது ஆற்றல் செலுத்தி, அதன் மூலம் ஏனைய எண்டோகிரைன் சுரப்பிகளையும் கட்டுப் படுத்தி, ஹார்மோன்களை சமன்செய்து, மனதளவிலும், உடலளவிலும் உற்சாகத்தை அளிக்கிறது. அவரவர் வாழ்க்கை முறை, தொழில்முறை ஆகியவற்றை பொருத்தும், நோய்களுக்கும், வயதிற்கேற்பவும் முறைபடி கற்று ஆசனங்களை செய்ய வேண்டும்.

தொடரும்.

கட்டுரை: டாக்டர் இரா.பத்மபிரியா, சித்தமருத்துவர், சென்னை.
Tags:    

Similar News