செய்திகள்
கைது

வங்கியில் 246 பவுன் கொள்ளையடித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது

Published On 2020-11-21 09:41 GMT   |   Update On 2020-11-21 09:41 GMT
பல்லடம் அருகே வங்கியில் 246 பவுன்நகை மற்றும் ரூ.19 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
பல்லடம்:

பல்லடம் அருகே உள்ள வே.கள்ளிப்பாளையத்தில் பாரத ஸ்டேட் வங்கி கிளை இயங்கி வருகிறது. இந்த வங்கிக்குள் கடந்த பிப்ரவரி மாதம் 22-ந் தேதி மர்ம ஆசாமிகள் புகுந்து வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தை உடைத்து அதில் இருந்த ரூ.18 லட்சத்து 93 ஆயிரம், மற்றும் 246 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பி சென்றனர்.

இந்த கொள்ளை தொடர்பாக 11 தனிப்படைகள் அமைத்து மர்ம ஆசாமிகளை தேடி வந்தனர். இதையடுத்து இந்த கொள்ளையில் அரியானா மாநிலத்தை சேர்ந்த அனில்சிங் (வயது 38), மற்றும் இஸ்ராகான், ராமன்ஜன்ப்பா, ராமகிருஷ்ணா ஆச்சார்யா ஆகியோர் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் அரியானா மாநிலம் குருகிராம் மாவட்டம் பாசாபூர் போலீசார் ஒரு திருட்டு வழக்கு ஒன்றில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த கஜராஜ் (33) என்பவரை கைது செய்து விசாரித்தனர்.

விசாரணையில் அவருக்கு கள்ளிப்பாளையம் வங்கி கொள்ளையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அரியானா போலீசார் தமிழக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதன் பேரில் கஜராஜை தமிழகம் அழைத்து வந்து விசாரணை நடத்த காமநாயக்கன்பாளையம் போலீசார் மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து தமிழக போலீசார் அரியானா சென்று, கஜராஜை கைது செய்து பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்தனர். பின்னர் அவரை பல்லடம் நீதித்துறை குற்றவியியல் நீதித்துறை நடுவர் அரிராம் முன்பு ஆஜர்படுத்தினர். இதையடுத்து கஜராஜை வருகிற 29-ந் தேதி காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை நடத்த நீதிபதி உத்தரவிட்டார்.
Tags:    

Similar News