செய்திகள்
அரிசி மூட்டைகள் கடத்திய லாரியை பொதுமக்கள் சிறைபிடித்தபோது எடுத்தபடம்.

திருவாரூரில் ரேஷன் அரிசி கடத்திய லாரியை சிறைப்பிடித்த பொதுமக்கள்

Published On 2020-10-14 10:17 GMT   |   Update On 2020-10-14 10:17 GMT
திருவாரூரில் ரேஷன் அரிசி கடத்திய லாரியை பொதுமக்கள் சிறைப்பிடித்தனர்.
திருவாரூர்:

திருவாரூர் கொடிக்கால்பாளையம் பகுதியில் ரேஷன் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று ரேஷன் கடையில் இருந்த அரிசி மூட்டைகளை வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்வதற்காக லாரி ஒன்றில் ஏற்றி கடத்தி செல்லப்படுவதாக அப்பகுதி மக்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு லாரியை வழிமறித்து நிறுத்தி சிறைப்பிடித்தனர்.

இந்த லாரியை சோதித்த போது, 100 மூட்டைகள் அரிசி கடத்தி செல்வது தெரியவந்தது. இதனை அறிந்த லாரி டிரைவர் உள்பட 5 பேர் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் திருவாரூர் வட்ட வழங்கல் அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த துணை வட்ட வழங்கல் அலுவலர் மணிவண்ணன் சம்பவ இடத்திற்கு வந்து அரிசி மூட்டைகளுடன் லாரியை கைப்பற்றி குடோனுக்கு எடுத்து சென்றார்.

இதுகுறித்து வட்ட வழங்கல் அதிகாரி மற்றும் துறை அதிகாரிகள் ரேஷன் கடையில் இருந்து அரிசி மூட்டைகள் எதற்காக லாரியில் ஏற்றி வெளியில் கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் ரேஷன் கடையில் இருந்து அரிசி கடத்தியதாக லாரியை பொதுமக்கள் சிறைப்பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News