செய்திகள்
பலியான சாந்திப்பிரியா

கணவன் கடத்தியதை தடுத்த பெண் அடித்து கொலை - 7 பேர் கும்பல் வெறிச்செயல்

Published On 2019-12-05 10:32 GMT   |   Update On 2019-12-05 10:32 GMT
செம்மரக்கடத்தல் தகராறில் கணவனை கடத்த முயன்ற பெண்ணை 7 பேர் கொண்ட கும்பல் அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வாணியம்பாடி:

வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பூங்குளத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 35). இவரது மனைவி சாந்திப்பிரியா (25).

இவர்கள் இருவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கோமதி (6) என்ற பெண் குழந்தை உள்ளது.

சீனிவாசனுக்கு ஒடுகத்தூரை சேர்ந்த அசோகன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு செம்மரம் வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.

சீனிவாசன் பூங்குளம் கிராமத்தில் இருந்து அசோகனுக்கு கூலி வேலைக்கு ஆட்களை அனுப்பி வைத்து வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சீனிவாசன் பூங்குளத்தில் இருந்து கிருஷ்ணமூர்த்தி, பழனி, இளையராஜா, சென்றாயன், சஞ்சய், மற்றொரு பழனி, வெங்கடேசன் ஆகிய 7 பேரை கூலி வேலைக்காக அசோகனிடம் அனுப்பி வைத்தார்.

அவர்களை அசோகன் ஆந்திர மாநிலத்தில் செம்மரம் வெட்டுவதற்காக அழைத்து சென்றார். அங்கு வெட்டப்பட்ட செம்மரங்களை தமிழகத்திற்கு கடத்தி வந்து அவற்றை விற்பனை செய்த பின்னர் கூலி வழங்குவதாக கூறி 7 பேரை பூங்குளத்திற்கு அனுப்பி வைத்தார்.

10 நாட்களாகியும் அவர்களுக்கு கூலி வழங்கவில்லை. இதனால் அவர்கள் 7 பேரும் சீனிவாசனிடம் கூலி வாங்கி தருமாறு வற்புறுத்தி வந்தனர்.

இந்நிலையில் சீனிவாசன் அசோகனிடம் பணம் வாங்கி கொண்டு தங்களுக்கு தர மறுக்கிறார் என நினைத்து நேற்று இரவு 7 பேரும் சீனிவாசன் வீட்டிற்கு சென்று தகராறு செய்தனர்.

அப்போது சீனிவாசனுக்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைக்கலப்பாக மாறியது. இதில் அவர்கள் 7 பேரும் சீனிவாசனை சரமாரியாக தாக்கி காரில் கடத்தினர்.

இதைப்பார்த்த சாந்திப் பிரியா மற்றும் சீனிவாசனின் தாய் மல்லிகா இருவரும் அவர்களை தடுத்தனர். அப்போது அவர்கள் சாந்திப்பிரியாவையும், மல்லிகாவையும் சரமாரியாக அடித்து தள்ளிவிட்டனர். இதில் கீழே விழுந்து அவர்கள் படுகாயமடைந்து மயங்கி விழுந்தனர்.

பின்னர் அவர்கள் சீனிவாசனை காரில் கடத்தி சென்றனர். இதற்கிடையே சாந்திப்பிரியாவின் சத்தம் கேட்டு ஊர்மக்கள் திரண்டு விட்டதால் பயந்துபோன 7 பேர் கும்பல் சீனிவாசனை காரில் இருந்து தள்ளிவிட்டு தப்பி சென்றனர்.

சாந்திப்பிரியா மயங்கி கிடப்பதை பார்த்த உறவினர்கள் அவரை வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சாந்திப் பிரியாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். மல்லிகாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து ஆலங்காயம் போலீஸ் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட சாந்திபிரியாவின் தந்தை மணி மற்றும் மாமனார் நாராயணன் ஆகியோர் தனித்தனியாக புகார் அளித்தனர்.

இது தொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டி வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் ஆலங்காயம் போலீஸ் நிலையத்தில் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் போலீஸ் நிலையம் முன்பகுதியில் ஆலங்காயம்- திருவண்ணாமலை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

வாணியம்பாடி டி.எஸ்.பி. பாலசுப்பிரமணி சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். உடனடியாக வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுதொடர்பாக போலீசார் 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தி, பழனி, இளையராஜா ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள 4 பேரை தேடி வருகின்றனர்.

கைதானவர்கள் கொடுத்த தகவலின் பேரில் ஒடுகத்தூர் அருகே மறைத்து வைக்கப்பட்ட 900 கிலோ செம்மரக் கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News