வழிபாடு
ஆத்மநாயகி அம்பாள்-ருத்ரகோடீசுவரர் திருக்கல்யாணம்

ஆத்மநாயகி அம்பாள்-ருத்ரகோடீசுவரர் திருக்கல்யாணம்

Published On 2022-02-12 03:44 GMT   |   Update On 2022-02-12 03:44 GMT
எஸ்.வி.மங்கலத்தில் மாசி மக திருவிழாவையொட்டி ஆத்மநாயகி அம்பாள்- ருத்ரகோடீசுவரர் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சிங்கம்புணரி அருகே உள்ள எஸ்.வி.மங்கலத்தில் பிரசித்தி பெற்ற ஆத்மநாயகி உடனுறை ருத்ர கோடீசுவரர் கோவில் உள்ளது. இது திருக்கயிலை பரம்பரை குன்றக்குடி, திருவண்ணாமலை ஆதீனம், பிரான்மலை வகை 5 கோவில்களில் ஒன்று. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மக திருவிழா மிக சிறப்பாக கொண்டாடப்படும்.

அது போல் இந்த ஆண்டுக்கான மாசி மக திருவிழா கடந்த 7-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து தினமும், காலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஒவ்வொரு நாளும் சிறப்பு அலங்காரங்களில் சாமி திருவீதி உலா வந்தார்.

அதனை தொடர்ந்து 5-ம் நாள் திருவிழாவான நேற்று திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கு கிராமத்தலைவர் காந்தி அம்பலம் தலைமை தாங்கினார். கோவில் கண்காணிப்பாளர் கேசவன், பேஸ்கர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர் எஸ்.வி மங்கலம் தெய்வசிகாமணி சிவா பட்டர் தலைமையில் சுப்ரமணிய சிவாச்சாரியார் உள்பட 9 பேர் கொண்ட குருக்கள் திருக்கல்யாண நிகழ்ச்சியை நடத்தி வைத்தனர். காலை 10.10 மணிக்கு ருத்ரகோடீசுவரர் ஆத்மநாயகி அம்பாளுக்கு திருமாங்கல்யத்தை அணிவித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு திருக்கல்யாணத்தை கண்டு தரிசித்தனர். அதனை தொடர்ந்து பரம்பரை மண்டகப்படியாளரான பரம்பரை கணக்கு ஸ்தானிகர் காளமேகம் பிள்ளை-ரமணி அம்மாள் குடும்பத்தினர் சார்பில் 1000-க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதை தொடர்ந்து இன்று(சனிக்கிழமை) சமணர்களுக்கு சாப விமோசனம் வழங்கிய கழுவன் திருவிழா நடைபெறுகிறது. வருகிற 15-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது. 16-ந்தேதி தீர்த்தவாரி நடைபெற்று மாசி மகத்தில் உலகப்புகழ் பெற்ற அரளிப்பாறை மஞ்சுவிரட்டு நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை திருக்கயிலாய பரம்பரை குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் பிரான்மலை வகை ஜந்து திருக்கோவில்கள் மற்றும் சதுர்வேத மங்களம் கிராமத்தினர் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News