வழிபாடு
அபிராமி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

அபிராமி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

Published On 2022-04-06 07:14 GMT   |   Update On 2022-04-06 07:14 GMT
திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
திண்டுக்கல் நகரின் மையத்தில் அமைந்துள்ள பழமையான பிரசித்தி பெற்ற அபிராமி அம்மன் உடனுறை பத்மகிரீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும் திருவிழாக்களில் சித்திரை திருவிழா முதன்மையானதாகும்.

மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா போலவே அனைத்து விசேஷங்களும் இங்கு சிறப்பாக நடைபெறும். அதன்படி இவ்வருட திருவிழாவுக்கான கொடியேற்றம் நேற்று நடைபெற்றது.

காலை 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் ரிஷப லக்கனத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட கொடி கோவில் கொடி மரத்தில் வேத மந்திரங்கள் முழங்க ஏற்றப்பட்டது. அதன் பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது.

கொடியேற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அலங்காரத்தில் அபிராமி அம்மன் சமேத பத்மகிரீஸ்வரர் மற்றும் ஞானாம்பிகை சமேத காளகத்தீஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு தினந்தோறும் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 14ந் தேதி காலை 9 மணிக்கு நடராஜன் அபிஷேகமும், மாலை 7.45 மணி முதல் 8.10 மணிக்குள் திருக்கல்யாணம் மற்றும் பூப்பல்லக்கில் அம்மன் திருவீதி உலா நடைபெறுகிறது.

15ந் தேதி திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும், 16ந் தேதி தீர்த்தவாரி மற்றும் வெள்ளி இடப வாகனத்தில் சுவாமி, அம்பாள் திருவீதி உலா நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர், இணை ஆணையர் மற்றும் உதவி ஆணையர் ஆகியோர் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News