செய்திகள்
உசிலம்பட்டியில் நடந்த விழாவில் அமைச்சர் மூர்த்தி ஒரு பெண்ணுக்கு கடன் உதவி வழங்கிய போது எடுத்த படம்

கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மதுரை மாறும் - அமைச்சர் மூர்த்தி

Published On 2021-06-06 14:58 GMT   |   Update On 2021-06-06 14:58 GMT
கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மதுரை மாறும் என்று அமைச்சர் மூர்த்தி பேசினார்.
உசிலம்பட்டி:

மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் காய்ச்சல் கணக்கெடுக்கும் பணியில் ஈடுப்பட்ட மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு கடன் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி திருமங்கலம், கள்ளிக்குடி, டி.கல்லுப்பட்டி, உசிலம்பட்டி, செல்லம்பட்டி மற்றும் சேடபட்டி ஒன்றியங்களில் உள்ள 1,493 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.1 கோடியே 4 லட்சத்து 51 ஆயிரம் மதிப்பீட்டில் கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி உசிலம்பட்டி, திருமங்கலத்தில் நடந்தது. கலெக்டர் அனிஷ் சேகர் தலைமை தாங்கினார். அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு கடன் உதவி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அடங்கிய மருந்து தொகுப்பு, முகக்கவசம் மற்றும் முழு உடற்கவசம் ஆகியவற்றை வழங்கினார்.

விழாவில் அவர் பேசியதாவது:- மதுரை மாவட்ட புறநகர் பகுதிகளில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. உடனடியாக கிராமப்புற பகுதிகளில் 120 மினி கொரோனா கவனிப்பு மையங்கள் தொடங்கப்பட்டன. 3,894 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களை கொண்டு வீடு வீடாக சென்று காய்ச்சல் கண்டறியும் பணி மேற்கொள்ளப்பட்டது.

மருத்துவர்கள் மற்றும் நர்சுகளுக்கு அடுத்தபடியாக தங்களது உயிரை பொருட்படுத்தாமலும், எந்தவித எதிர்பார்ப்புமின்றி தியாக உணர்வோடு மகளிர்சுய உதவிக்குழுவினர் ஈடுப்பட்டனர். எனவே அவர்களை ஊக்குவிக்கும் விதமாக மாவட்டத்தில் உள்ள சுமார் 3,894 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினருக்கு கடன் உதவி வழங்கப்படுகிறது. விரைவில் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மதுரை மாவட்டம் உருவாகும்.

இவ்வாறு அவர் பேசினார். விழாவில் திருமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட 289 பெண்களுக்கு ரூ.20.23 லட்சம் மதிப்பிலும், கள்ளிக்குடி ஒன்றியத்தில் 185 பெண்களுக்கு ரூ.12.95 லட்சம் மதிப்பிலும், டி.கல்லுப்பட்டி ஒன்றியத்தில் 327 பெண்களுக்கு ரூ.22.89 லட்சம் மதிப்பிலும், உசிலம்பட்டி ஒன்றியத்திl 156 பெண்களுக்கு ரூ.10.92 லட்சம் மதிப்பிலும், செல்லம்பட்டி ஒன்றியத்தில் 260 பெண்களுக்கு ரூ.18.20 லட்சம் மதிப்பிலும், சேடபட்டி ஒன்றியத்தில் 276 பெண்களுக்கு ரூ.19.32 லட்சம் மதிப்பிலும் ரூ.1 கோடியே 4 லட்சத்து 51 ஆயிரம் கடன் உதவி வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் வெங்கடேசன் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News