செய்திகள்
எடியூரப்பா

வெடி விபத்தில் தவறு செய்தவர்கள் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை- எடியூரப்பா

Published On 2021-02-24 02:40 GMT   |   Update On 2021-02-24 02:40 GMT
வெடி விபத்தில் 6 பேர் பலியான விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது பாரபட்சம் பார்க்காமல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித்தார்.
பெங்களூரு :

சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வெடிப்பொருட்கள் வெடித்து சிதறியதில் 6 தொழிலாளர்கள் உடல் சிதறி பலியானார்கள். இந்த சம்பவம் கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வெடி விபத்து சம்பவம் குறித்து மாவட்ட பொறுப்பு மந்திரி சுதாகர், முதல்-மந்திரி எடியூரப்பாவை தொடர்பு கொண்டு பேசி, அதுபற்றிய தகவல்களை தெரிவித்தார்.

இதையடுத்து, சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது எந்த விதமான பாரபட்சம் பார்க்காமல் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும்படி முதல்-மந்திரி எடியூரப்பா கூறியதாக தெரிகிறது.

சிக்பள்ளாப்பூரில் நடந்த வெடி விபத்து சம்பவம் குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது-

சிக்பள்ளாப்பூரில் வெடிப்பொருட்கள் வெடித்து 6 பேர் பலியாகி இருப்பது பற்றி கேள்விப்பட்டதும் மிகுந்த மன வேதனை அடைந்தேன். பலியானவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன். வெடி விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு, இந்த துயரத்தை தாங்கும் சக்தியை கடவுள் கொடுக்க வேண்டும். சம்பவம் தொடர்பாக மாவட்ட பொறுப்பு மந்திரி மற்றும் அரசு அதிகாரிகளிடம் இருந்து தகவல்களை பெற்றுள்ளேன்.

வெடி விபத்து சம்பவம் குறித்து உயர்மட்ட அளவில் விசாரணை நடைபெறும். தவறு செய்தவர்கள் மீது எந்த விதமான பாரபட்சமும் பார்க்காமல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதுபற்றி அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
Tags:    

Similar News