செய்திகள்
திமுக-காங்கிரஸ்

உள்ளாட்சியில் யார், எங்கு போட்டியிடுவது? - தி.மு.க.கூட்டணி கட்சி தலைவர்கள் ஆலோசனை

Published On 2021-09-15 07:43 GMT   |   Update On 2021-09-15 07:43 GMT
உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் தான் வேட்பாளர்கள் போட்டியிடும் இடங்களை ஒதுக்கிக் கொடுப்பது வழக்கம்.
சென்னை:

தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் 6, 9 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர், மாவட்ட ஊராட்சி தலைவர் ஆகிய பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

இதில் கிராம ஊராட்சி உறுப்பினர் பதவிக்கும், ஊராட்சி தலைவர் பதவிக்கும் கட்சி சார்பு இல்லாமல் சுயேட்சையாக வேட்பாளர்களை தேர்தல் கமி‌ஷன் தேர்ந்தெடுக்கும்.

மற்ற பதவிகளுக்கு கட்சி சார்பில் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதற்காக 4 வர்ணங்களில் ஓட்டு சீட்டுகள் அச்சடிக்கப்பட உள்ளன. தேர்தலுக்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் செய்துவரும் நிலையில், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தேர்தல் அதிகாரியாக மாவட்ட கலெக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவரது கண்காணிப்பின் கீழ் மாவட்ட வருவாய் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கோட்டாட்சியர், தாசில்தார் ஆகியோர் தேர்தல் அதிகாரிகளாக இருந்து இந்த தேர்தலை நடத்த உள்ளனர்.

9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து இன்று முதல் விருப்ப மனுக்கள் பெறப்படும் என்றும் தேர்தல் கமி‌ஷன் அறிவித்துள்ளது.

இன்று நவமி என்பதால் அரசியல் கட்சி சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்யப்படவில்லை. சுயேட்சைகள்தான் மனுதாக்கல் செய்கின்றனர்.

இந்த நிலையில் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் வேட்பாளரை நிறுத்துவதற்கு பட்டியல் தயார் செய்து வருகிறது. தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சி, உள்ளிட்ட கட்சிகள் உள்ளாட்சி தேர்தலில் கணிசமான இடங்களில் போட்டியிட விரும்புகின்றன.

இதற்காக 9 மாவட்டங்களிலும் தி.மு.க.வின் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் இடங்களை குறிப்பிட்டு அந்தந்த மாவட்ட செயலாளர்களிடம் பட்டியலை சமர்பித்து வருகின்றனர்.


உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் தான் வேட்பாளர்கள் போட்டியிடும் இடங்களை ஒதுக்கிக் கொடுப்பது வழக்கம்.

இதில் சமசர தீர்வு ஏற்படாத பட்சத்தில்தான் தி.மு.க. தலைமையிடம் கூட்டணி கட்சியினர் எடுத்து சொல்வார்கள். அந்த வகையில் தற்போது தி.மு.க. மாவட்ட செயலாளர்களிடம் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் தங்கள் பட்டியலை கொடுத்துள்ளனர்.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தை பொறுத்தவரை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தேர்தல் பணிகளை கவனித்து வருகிறார். இதில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் தி.மு.க. கூட்டணி கட்சியினர் அமைச்சர் தா.மோ.அன்பரசனை சந்தித்து பட்டியல் கொடுத்து வருகின்றனர்.

காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று தாங்கள் போட்டியிட விரும்பும் பட்டியலை சமர்பித்து உள்ளனர். இன்று மாலை ம.தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பட்டியல் சமர்பிக்க உள்ளனர்.

இதில் காங்கிரஸ் கட்சியினர் நிறைய இடங்களை கேட்டு பட்டியல் கொடுத்துள்ளனர். இதில் எத்தனை இடங்கள் காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் என்பது இனிமேல்தான் தெரிய வரும். தி.மு.க.வில் நாளை செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் 10 இடங்களில் விருப்ப மனுக்கள் வாங்கப்படுகின்றன. நாளை மறுநாள் வேட்பாளர்களிடம் நேர்காணல் நடத்தப்படுகிறது.

இந்த சூழலில் கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த இடங்கள் ஒதுக்கப்படும் என்பது இன்னும் 2 நாளில் தெரியவந்துவிடும். இன்றும் நாளையும் இதற்கான பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. கூட்டணி கட்சி தலைவர்கள் மாவட்ட செயலாளர்களுடன் பேசி வருகின்றனர். இதில் சமரச தீர்வு காணப்பட்டு விடும் என்று தி.மு.க. நிர்வாகிகள் தெரிவித்தனர்.

உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கி உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியிலும் இப்போதே ஈடுபடத் தொடங்கி உள்ளனர். இதனால் அரசியல் களம் பரபரப்பு அடைந்துள்ளது.


Tags:    

Similar News