செய்திகள்
காய்கறிகள்

கோயம்பேடு மார்க்கெட்டில் முட்டைகோஸ், முள்ளங்கி இஞ்சி விலை கடும் வீழ்ச்சி

Published On 2020-12-28 09:17 GMT   |   Update On 2020-12-28 09:17 GMT
கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து காய்கறிகளும் விலை குறைந்துள்ளன. முருங்கைக்காய் தவிர மற்ற காய்கறிகள் மலிவாக கிடைக்கின்றன.

சென்னை:

கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து காய்கறிகளும் விலை குறைந்துள்ளன. முருங்கைக்காய் தவிர மற்ற காய்கறிகள் மலிவாக கிடைக்கின்றன. அதிக விளைச்சல் காரணமாக வரத்து அதிகரித்துள்ளது. அதற்கேற்ற அளவு விற்பனை இல்லாததால் விலை குறைவாக உள்ளது. முட்டைகோஸ் கடந்த வாரம் கிலோ ரூ. 25-க்கு விற்கப்பட்டது. அவை ரூ. 10 ஆக குறைந்துள்ளது. ரூ. 30-க்கு விற்கப்பட்ட முள்ளங்கி ரூ. 15-க்கும், ரூ. 30-க்கு விற்கப்பட்ட புடலங்காய் கிலோ ரூ. 20-க் கும் விற்கப்படுகிறது.

எப்போதும் அதிக விலைக்கு விற்கக்கூடிய இஞ்சி விலை சரிந்துள்ளது. கிலோ ரூ. 70-க்கு விற்கப்பட்ட இஞ்சி தற்போது ரூ. 40-க்கு விற்கப்படுகிறது. உருளைக் கிழங்கு கிலோ ரூ.30 ஆக குறைந்துள்ளது.

இதுதவிர கேரட் கிலோ ரூ. 30, பீட்ரூட்-ரூ. 25, காலிபிளவர்-ரூ. 30, பச்சை பட்டாணி-ரூ. 30, நூல்கல்-ரூ. 20, அவரைக்காய்-ரூ. 30, வெண்டைக்காய்-ரூ. 25, கத்தரிக்காய்-ரூ. 25, பல்லாரி வெங்காயம்-ரூ. 40, சின்ன வெங்காயம்-ரூ. 60, சேனை- ரூ. 25, சவ்சவ்-ரூ. 10, பச்சை மிளகாய்-ரூ. 20, சேப்பங் கிழங்கு-ரூ. 30-க்கு விற்கப்படுகிறது. முருங்கைக்காய் மட்டும்தான் கிலோ ரூ. 60-க்கு விற்கப்படுகிறது.

கோயம்பேடு மொத்த விற்பனையில் அனைத்து காய்கறிகளும் குறைவான விலைக்கு கிடைத்தாலும் வியாபாரம் மந்தமாக உள்ளது.

இதுகுறித்து மொத்த வியாபாரி சுந்தர்ராஜன் கூறியதாவது:-

பருவ மழை போதுமான அளவு பெய்ததால் காய்கறிகள் அதிகமாக விளைகின்றன. இதனால் வரத்து அதிகமாக உள்ளன. இன்று 400 லாரிகளில் காய்கறிகள் வந்துள்ளன. ஆனால் வியாபாரம் எதிர்பார்த்த அளவு நடைபெறவில்லை. குறைந்த அளவில் தான் வியாபாரிகள் வருகிறார்கள்.

ஓட்டல்கள் இன்னும் முழுமையாக திறக்காததால் காய்கறி விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. மார்கழி மாதம் என்பதால் விசே‌ஷ காரியங்கள் எதுவும் நடக்காது. அதனால் வியாபாரம் குறைவாக உள்ளது. இதனால் காய்கறிகள் குறைந்த விலைக்கு விற்கப்படுகின்றன.

பொங்கல் வரையில் விலை உயர்வதற்கு வாய்ப்பு இல்லை. இதே விலையில் தான் காய்கறிகள் கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News