செய்திகள்
அதிமுக

உள்ளாட்சி மறைமுக தேர்தல்- அதிக இடங்களை பிடித்தது அதிமுக

Published On 2020-01-11 09:21 GMT   |   Update On 2020-01-11 09:21 GMT
தமிழகத்தில் இன்று மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள், ஒன்றிய தலைவர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுகத் தேர்தலில் அதிமுக அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளது.
சென்னை:

தமிழக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த மாதம் 27, 30-ந்தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.

27 மாவட்டங்களில் உள்ள மாவட்ட வார்டு உறுப்பினர், ஒன்றிய வார்டு உறுப்பினர், ஊராட்சி தலைவர், உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இதில் 77 சதவீத வாக்குகள் பதிவானது.

கடந்த 2-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. 515 மாவட்ட வார்டு உறுப்பினர் பதவிகளில் தி.மு.க.வுக்கு 244 இடங்களிலும், அ.தி.மு.க.வுக்கு 214 இடங்களிலும் வெற்றி கிடைத்தது. தி.மு.க. கூட்டணி அ.தி.மு.க.வை விட 30 மாவட்ட வார்டு உறுப்பினர்களை பெற்றது.

5,090 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் இடங்களில் தி.மு.க. 2,099 இடங்களிலும், அ.தி.மு.க. 1,789 இடங்களிலும் வெற்றி பெற்றன. அதுபோல தி.மு.க. கூட்டணி கட்சிகளும் அதிக இடங்களில் வெற்றி பெற்று இருந்தது.

தேர்தல் நடைபெற்ற 27 மாவட்டங்களில் கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர், கன்னியாகுமரி, கரூர், தர்மபுரி, தூத்துக்குடி, தேனி, நாமக்கல், விருதுநகர், அரியலூர், கடலூர் ஆகிய 13 மாவட்ட பஞ்சாயத்துகளில் அ.தி.மு.க. அதிக உறுப்பினர்களை பெற்றது.

அதுபோல தி.மு.க.வுக்கு புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருவாரூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மதுரை, திண்டுக்கல், நீலகிரி, திருச்சி, பெரம்பலூர், கிருஷ்ணகிரி ஆகிய 13 மாவட்டங்களில் அதிக உறுப்பினர்கள் கிடைத்தனர். சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் அ.தி.மு.க., தி.மு.க. சரிசமமான உறுப்பினர்களை பெற்றது.

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் திங்கட்கிழமை பதவி ஏற்றனர். இதையடுத்து மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத் தலைவர், ஒன்றிய ஊராட்சி தலைவர், துணைத் தலைவர், கிராம ஊராட்சி தலைவர் ஆகிய 5 பதவி இடங்களுக்கு பிரதிநிதிகளை தேர்வு செய்ய மறைமுக தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.

அதன்படி இன்று (சனிக்கிழமை) 27 மாவட்டங்களிலும் 5 உள்ளாட்சி பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தப்பட்டது. இதையொட்டி தேர்தல் நடைபெற்ற மாவட்ட கலெக்டர் அலுவலகங்களிலும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும், கிராம பஞ்சாயத்து அலுவலகங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

27 மாவட்ட ஊராட்சி தலைவர், 27 துணைத் தலைவரை தேர்வு செய்ய 515 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் வாக்களித்தனர். 314 ஊராட்சி ஒன்றிய தலைவர், 314 துணைத் தலைவரை தேர்வு செய்ய 5,090 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

அதுபோல 9,624 கிராம பஞ்சாயத்து துணைத் தலைவர்களை தேர்வு செய்வதற்கு 76,744 கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள் வாக்களித்தனர். வாக்குகள் எண்ணும் பணி உடனடியாக தொடங்கியது.

பகல் 11 மணிக்கு பிறகு மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் ஒன்றிய ஊராட்சி தலைவர் பதவிகளை கைப்பற்றியவர்கள் விவரம் வெளியாக தொடங்கியது.  மாவட்ட ஊராட்சி தலைவர் பதவி இடங்களை அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் சரிசமமாக பெற்று வந்தன.

1 மணி நிலவரப்படி மொத்தம் உள்ள 27 மாவட்டங்களில் 20 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளில் வெற்றி பெற்ற கட்சிகள் விவரம் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதில் அ.தி.மு.க. தேனி, கரூர், அரியலூர், ஈரோடு, தர்மபுரி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாமக்கல், புதுக்கோட்டை, திருப்பூர், சேலம் (பா.ம.க.) ஆகிய 11 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளை கைப்பற்றி இருந்தது.


அதுபோல தி.மு.க. பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், திண்டுக்கல், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகப்பட்டினம், மதுரை ஆகிய 9 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளை கைப்பற்றி இருந்தது.

அதே சமயத்தில் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கான இடங்களை அ.தி.மு.க. அதிகமாக கைப்பற்றியுள்ளது. முடிவுகள் வெளியான ஆரம்பத்தில் இருந்தே அதிக ஒன்றிய தலைவர் பதவி அ.தி.மு.க. வசம் ஆனது.

மதியம் 1 மணி நிலவரப்படி 314 ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கான தேர்தலில் 175 இடங்களின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு இருந்தன. அதில் 108 ஒன்றிய தலைவர் பதவியை அ.தி.மு.க. கைப்பற்றி வெற்றியை ருசித்தது.  தி.மு.க.வுக்கு 67 ஒன்றிய ஊராட்சி தலைவர் பதவிகள் கிடைத்து இருந்தன.

பிற்பகல் 3 மணி நிலவரப்படி, மொத்தம் உள்ள 27 மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவியிடங்களில் 26 இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதிமுக 14 இடங்களிலும், திமுக 12 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன.  இதேபோல் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கான தேர்தலில் அதிமுக 150 இடங்களிலும், திமுக 135 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது.

சங்கராபுரம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் அறிவித்துள்ளார். அதே போன்று சில கிராம ஊராட்சிகளிலும் துணைத் தலைவர் தேர்தல் இன்று நடைபெறவில்லை.

ஒன்றிய ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் தி.மு.க. கூட்டணி கணிசமான இடங்களை கைப்பற்றி இருந்தது. இதனால் இன்று மறைமுக தேர்தலின் போது 83 ஒன்றிய தலைவர் பதவியை தி.மு.க. எளிதாக கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதில் சற்று மாற்றம் காணப்பட்டது.

அதே சமயத்தில் அ.தி.மு.க. அதிகம் வெற்றி பெற்ற பகுதிகளில் எளிதாக தலைவர், துணைத் தலைவர் பதவிகளை கைப்பற்றியது. அந்த வகையில் அ.தி.மு.க. வுக்கு 43 ஊராட்சி ஒன்றியங்களில் தலைவர் பதவி மிக எளிதாக கிடைத்தது.

179 ஒன்றியங்களில் தலைவர், துணைத் தலைவர் பதவிகளை கைப்பற்ற அ.தி.மு.க.- தி.மு.க. இடையே கடும் போட்டி நிலவியது.

தலைவர், துணைத் தலைவர் பதவிகளை பிடிப்பதற்காக சில இடங்களில் குதிரை பேரம் நடந்தது. இதனால் பெரும்பாலான வார்டு உறுப்பினர்கள் கடந்த 4 நாட்களாக பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து சென்று தங்க வைக்கப்பட்டு இருந்தனர். இன்று காலை அவர்கள் அழைத்து வரப்பட்டு வாக்களித்தனர்.
Tags:    

Similar News