செய்திகள்
முகுல்ராய்

தனக்கு வழங்கப்பட்டுள்ள ‘இசட்’ பிரிவு பாதுகாப்பை விலக்கிக்கொள்ள முகுல்ராய் வேண்டுகோள்

Published On 2021-06-18 02:14 GMT   |   Update On 2021-06-18 02:14 GMT
மேற்கு வங்காளத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலை முன்னிட்டு முகுல்ராய்க்கு வழங்கப்பட்டிருந்த ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு ‘இசட்’ பிரிவுக்கு உயர்த்தப்பட்டது.
புதுடெல்லி:

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் முன்னணி தலைவராக இருந்த முகுல்ராய் கடந்த 2017-ம் ஆண்டு பா.ஜனதாவில் இணைந்தார். அவருக்கு கட்சியின் தேசிய துணைத்தலைவர் பதவி வழங்கப்பட்டது. பா.ஜனதாவில் இணைந்ததும் அவருக்கு ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் மேற்கு வங்காளத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலை முன்னிட்டு அவருக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு ‘இசட்’ பிரிவுக்கு உயர்த்தப்பட்டது.

அதன்படி, மேற்கு வங்காளத்தில் முகுல்ராய்க்கு ஆயுதம் தாங்கிய 24 சி.ஆர்.பி.எப். கமாண்டோக்கள் பாதுகாப்பு வழங்கி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பா.ஜனதாவில் இருந்து விலகி, தனது மகனுடன் மீண்டும் அவர் திரிணாமுல் காங்கிரசுக்கு திரும்பினார். இதைத்தொடர்ந்து தனக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பை விலக்கிக்கொள்ளுமாறு மத்திய அரசுக்கு அவர் கடிதம் எழுதினார்.

இதை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு அவர் மற்றும் அவரது மகனுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பை திரும்பப்பெற்று உள்ளது. இது தொடர்பாக சி.ஆர்.பி.எப். நிர்வாகத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. முகுல்ராய் மற்றும் அவரது மகனுக்கு இனிமேல் மாநில போலீசாரின் பாதுகாப்பு மட்டுமே வழங்கப்படும்.
Tags:    

Similar News