செய்திகள்
மரணம்

அரியலூர் அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த தந்தை-மகன் பலி

Published On 2021-10-09 04:32 GMT   |   Update On 2021-10-09 04:32 GMT
மின்சாரம் பாய்ந்து ஒரே நேரத்தில் தந்தை, மகன் பலியான சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அரியலூர்:

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 47), விவசாயி. இவரது மனைவி சந்திரா. இவர்களுக்கு 2 மகள்களும், சங்கர் என்ற ஒரு மகனும் இருந்தனர்.

2 மகள்களுக்கும் திருமணம் செய்து கொடுத்தபின் அதே பகுதியில் விவசாய நிலத்திற்கு அருகில் வீடு கட்டி மகன் சங்கருடன், இவர்கள் வசித்து வந்தனர். சங்கர் அப்பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் வேலை பார்த்து வந்தார்.

சங்கர் காலையில் கடைக்கு சென்றால் இரவு 9 மணி அளவில் வீடு திரும்புவது வழக்கம். இந்தநிலையில் நேற்று அரியலூர் மாவட்டம் முழுவதும் கனமழை பெய்தது. இதில் பல இடங்களில் மரங்கள், மின் கம்பம்பங்கள் சாய்ந்து கிடந்தன.

நேற்று இரவு மழை நின்றவுடன், சங்கர் தனது சைக்கிளை தள்ளிக்கொண்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். வீட்டின் அருகே வந்த போது, அங்கு அறுந்து கிடந்த மின் கம்பியில் எதிர்பாராதவிதமாக மிதித்துள்ளார். இதில் உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார்.

உடலில் மின்சாரம் பாய்ந்து கொண்டு இருந்ததோடு, பலத்த காயம் அடைந்த சங்கர் அலறினார். இந்த சத்தம் கேட்டு வீட்டில் இருந்த முத்துசாமி, பதறியடித்துக்கொண்டு ஓடி வந்தார். அங்கு மகன் மீது மின்சாரம் பாய்ந்ததை அறிந்த அவர், அருகில் கிடந்த ஒரு மரக்குச்சியை எடுத்து, மின் கம்பியை அகற்ற முயற்சித்தார்.

அப்போது அந்த குச்சி மழையில் நனைந்து ஈரமாக இருந்ததால் முத்துச்சாமி மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் தந்தை, மகன் இருவரும் அதே இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த கீழப்பழூர் இன்ஸ்பெக்டர் சகாயம் அன்பரசு, மின்சாரம் பாய்ந்து பலியான இருவரின் உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். பின்பு சம்பவ இடத்தை ஆய்வு மேற்கொண்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்ததோடு, அறுந்து கிடந்த வயர்களை சரி செய்யும் பணியை மேற்கொண்டுள்ளனர்.

மின்சாரம் பாய்ந்து ஒரே நேரத்தில் தந்தை, மகன் பலியான சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News