செய்திகள்
தாதர் ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படும் காட்சி.

முழு ஊரடங்கு அச்சம் காரணமாக சொந்த ஊர்களுக்கு திரும்பும் வெளிமாநில தொழிலாளர்கள்

Published On 2021-04-13 01:44 GMT   |   Update On 2021-04-13 01:44 GMT
மகாராஷ்டிராவில் நோய் பரவல் சங்கிலியை உடைக்க முழு ஊரடங்கை அமல்படுத்த அரசு முடிவு செய்து உள்ளது. இது தொடர்பான அறிவிப்பு நாளை (புதன்) இரவு வெளியாகலாம் என எதிர்பாா்க்கப்படுகிறது.
மும்பை :

மகாராஷ்டிராவில் 2-வது கொரோனா அலை வீசி வருகிறது. மாநிலத்தில் நோய் தொற்று அசுர வேகத்தில் பரவி வருகிறது. நேற்று முன்தினம் புதிய உச்சமாக 63 ஆயிரத்து 294 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். மேலும் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5½ லட்சத்தை தாண்டி உள்ளது. இந்தநிலையில் நோய் பரவல் சங்கிலியை உடைக்க முழு ஊரடங்கை அமல்படுத்த மாநில அரசு முடிவு செய்து உள்ளது. இது தொடர்பான அறிவிப்பு நாளை (புதன்) இரவு வெளியாகலாம் என எதிர்பாா்க்கப்படுகிறது.

இந்தநிலையில் முழு ஊரடங்கு அச்சம் காரணமாக மும்பை, தானே, புனே நகரங்களில் இருந்து வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு படையெடுக்க தொடங்கி உள்ளனர். குறிப்பாக உத்தரபிரதேசம், பீகார் போன்ற வடமாநில ரெயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

இதையடுத்து மத்திய ரெயில்வே வடமாநிலங்களுக்கு கூடுதல் ரெயில்களை இயக்க உள்ளதாக அறிவித்து உள்ளது. இதுகுறித்து மத்திய ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி சிவாஜி சுதார் கூறுகையில், "பயணிகள் அவசரகதியில் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டாம். பயணிகள் வசதிக்காக கோடை காலத்தில் கூடுதல் ரெயில்கள் இயக்கப்படும். மேலும் உறுதி செய்யப்பட்ட (கன்பார்ம்) டிக்கெட் உள்ள பயணிகள் மட்டுமே ரெயில்களில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்" என்றார்.

இதேபோல உத்தரபிரதேசத்தில் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ளதாகவும், அதில் வாக்களிக்கவும் அதிகம் பேர் அங்கு செல்வதாகவும் கூறப்படுகிறது.
Tags:    

Similar News