செய்திகள்
அமித் ஷா

கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையா? -உள்துறை மந்திரி அமித் ஷா மறுப்பு

Published On 2021-04-09 11:20 GMT   |   Update On 2021-04-09 11:20 GMT
அனைத்து மாநிலங்களுக்கும் போதுமான அளவு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக உள்துறை மந்திரி அமித் ஷா கூறினார்.
கொல்கத்தா:

மகாராஷ்டிராவில் தலைநகர் மும்பை உள்பட மாநிலம் முழுவதும் பல மையங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டது. குறிப்பாக மும்பையில் நேற்று சில மையங்களில் தடுப்பூசி இருப்பு இல்லை என்று கூறி நுழைவு வாயிலில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. மேலும் அங்கு தடுப்பூசி போட வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இதேபோல் மேலும் சில மாநிலங்களிலும் தடுப்பூசி பற்றாக்குறை உள்ளதாக தகவல்கள் வெளியாகின. 

குறைந்த பாதிப்பு உள்ள மாநிலங்களுக்கு அதிக அளவு தடுப்பூசி அனுப்பப்பட்டதாகவும், பாதிப்பு அதிகம் உள்ள மகாராஷ்டிராவுக்கு குறைவான அளவே மருந்து அனுப்பப்பட்டதாகவும் மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே குற்றம்சாட்டினார். 

பல இடங்களில் தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டு வருகின்றன, மக்களை திருப்பி அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது என்று கூறிய அவர், தடுப்பூசி விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் இடையே மோதல் இருக்கக்கூடாது என்றும் குறிப்பிட்டார். 



இந்நிலையில், கொல்கத்தாவில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா பேசியதாவது:-

பல்வேறு மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை இருப்பதாக வெளியாகும் தகவல்கள் உண்மையல்ல. அனைத்து மாநிலங்களுக்கும் போதுமான அளவு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. 

மேற்கு வங்காளத்தில் மத்திய பல்கலைக்கழகம் மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவோம். கோர்கா சமூகங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்குவது தொடர்பாக பணியாற்றுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News